ஜிம் ஜாங் உன் (kim jong un) பற்றி கூகுளில் தேடிய வடகொரிய உளவுத்துறை உயர் அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு வடகொரிய அதிபராக கிம் ஜாங் உன் (kim jong un) பதவிக்கு வந்த நிலையில், நாட்டில் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஆட்சி செய்து வருகிறார். மேலும், அவரது சர்வாதிகார ஆட்சியில் அவரை எதிர்ப்பவர்களே இருக்கக் கூடாது என்ற நோக்கத்திலும் செயல்பட்டு வருகிறார்.
மேலும், தனக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு மரண தண்டனையும் விதித்து வருகிறார். இந்நிலையில், அந்நாட்டு மக்களால் வெளி உலக செய்திகள் எதையும் அறிந்து கொள்ளவும் முடியாது. மேலும், வடகொரியாவில் நடக்கும் நிகழ்ச்சிகளை பற்றியும் வெளிநாட்டவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்காது.
இப்படிப்பட்ட சூழலில், வடகொரிய மக்கள் வெளி உலகத்தின் தொடர்பே இல்லாமல் அந்த நாட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். அந்த நாட்டு மக்கள் இணையத்தை பயன்படுத்தவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூகுள் போன்ற தேடும் தளங்களையும் பயன்படுத்த முடியாது. அந்நாட்டு அரசே உருவாக்கி நிர்வகிக்கும் Kwangmyong என்ற இணையதளத்தை மட்டுமே அங்கு பயன்படுத்த வேண்டும்.
சில உயர்மட்ட அதிகாரிகள் மட்டுமே இன்டர்நெட்டில் கூகுள் போன்ற தளங்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இணையத்தை எதற்கு அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில், பியூரோட் 10 என்று அழைக்கப்படும் வடகொரிய உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கிம் ஜாங் உன் பற்றி கூகுளில் தேடி இருக்கிறார்.
இதனையடுத்து, கூகுள் இணையதளத்தில் கிம் ஜாங் உன் பற்றிய விவரங்களை அவர் தேடிப் பார்த்தது பற்றிய தகவல் கிம் ஜாங் உன்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கிம் ஜாங் உன் அந்த உளவுத்துறை அதிகாரிக்கு உடனடியாக மரண தண்டனை விதித்து உத்தரவிட்டு இருக்கிறார்.
அந்த உளவுத்துறை அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய உத்தரவு பிறப்பித்திருக்கிறார். உளவுத்துறையில் உயர் மட்டத்தில் பணிபுரியும் அதிகாரிக்கே இப்படி ஒரு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் செய்தி உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.