சென்னை கோயம்பேட்டில் Koyambedu Bus Stand Land அனைவருக்கும் பயன்படும் வகையில் மிகப்பெரிய பூங்காவை அமைக்க வேண்டும். அந்த இடத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “சென்னை கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் Koyambedu Bus Stand Land அமைக்கப்பட்டுள்ள 36 ஏக்கர் நிலம் அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்
தனியார் நிறுவனத்துக்கு தாரை வார்க்கப்படவிருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறோம் என்ற பெயரில் பல்லாயிரம்கோடி மதிப்புள்ள அரசு நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை அவசரம், அவசரமாக கிளாம்பாக்கத்திற்கு மாற்றிய தமிழகஅரசு, இன்னொரு பகுதியை இந்த ஆண்டு இறுதிக்குள் கூத்தம்பாக்கத்திற்கு மாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டிவருகிறது.
இதற்குக் காரணம் ஆட்சி முடிவதற்கு முன்பாகவே கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தை அபுதாபியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அவசரம் தான்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை திருமழிசைக்கு மாற்றிவிட்டு, அந்த இடத்தில் தனியார் வணிக வளாகம் அமைக்க அரசு திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தமிழக அரசு மறுத்தது.
ஆனால், இப்போது கோயம்பேடு பேருந்து நிலையம் முழுமையாக இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்பாகவே,
அந்த இடத்தில் மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்தப்போவதாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருக்கிறார்.
இதை வைத்துப் பார்க்கும்போது கோயம்பேடு பேருந்து நிலையம் அபுதாபி நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படுவது உறுதியாகிறது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தின் மொத்தப்பரப்பு 36ஏக்கர், தனியார் பேருந்து நிலையம் 6.8ஏக்கர்,
கோயம்பேடு சந்தைப் பூங்கா 7.6ஏக்கர், கூடுதலாக உள்ள நிலம் 16ஏக்கர் ஆகியவற்றைச் சேர்த்தால் மொத்தம் 66.4ஏக்கர் நிலம் கிடைக்கும். அதன் இன்றைய சந்தைமதிப்பு ரூ.13,200 கோடி ஆகும்.
இது அபுதாபி நிறுவனம் தமிழகத்தில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள ரூ.3500கோடி முதலீட்டைவிட 4மடங்கு அதிகம்ஆகும்.
இவ்வளவு அதிக மதிப்புள்ள மக்களுக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது. மாறாக அந்தநிலத்தை பூங்காவாக மாற்றுவதே சரியாகும்.
டெல்லியின் மெஹ்ராலி பூங்கா 200ஏக்கரிலும், லோதி பூங்கா 90ஏக்கரிலும் அமைந்துள்ளன. இவை தவிர
புதுடெல்லியின் பதர்பூர் பகுதியில் 880ஏக்கர் பரப்பளவில் புதிய பூங்கா திறக்கப்படும் போது ஆசியாவின் மிகப்பெரிய பூங்காவாக இருக்கும்.
ஆனால், சென்னையில் அத்தகைய பூங்காக்கள் இல்லை. சென்னையின் பெரிய பூங்காவான செம்மொழி பூங்கா வெறும் 20ஏக்கரிலும், அண்ணா நகர் கோபுர பூங்கா 15ஏக்கரிலும் மட்டுமே அமைந்துள்ளன.
அதனால், சென்னையின் பசுமைப்போர்வை பரப்பு பெருமளவில் குறைந்து விட்ட நிலையில் அதை ஈடுகட்ட புதிய பூங்காக்களை உருவாக்குவது மிகவும் அவசியமாகும். அதற்கு கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் மிகச்சிறந்த தேர்வாகும்.
எனவே, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், தனியார் பேருந்து நிலையம், சந்தைப் பூங்கா, கூடுதல் நிலம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து,
66 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை அமைக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.