சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
இதற்கிடையே தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம், பல்லாவரம், போரூர், கோட்டூர்புரம் தி நகர், மாம்பலம், எழும்பூர் பகுதிகளில் கனமழை பெய்தது. சென்னை மட்டுமின்றி பல்வேறு புறநகர்ப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் மட்டும் கனமழை பெய்தது.
இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவாரூர் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு வாக்காளர் பயிற்சி முகாம் நடைபெற உள்ளதால் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.