திருப்பதியில் பாதயாத்திரை சென்ற போது சிறுவனை தூக்கி சென்ற சிறுத்தையை (leopard) வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
பக்தர்கள் பாதயாத்திரையாக செல்லும் திருமலை ஏழுமலையான் கோவில் அலிபிரி மலைப்பாதையில், கடந்த வியாழக்கிழமை அன்று ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டம் அதோனியை சேர்ந்த 6 பேர் கொண்ட குடும்பத்தினர் இரவு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் ஆஞ்சநேயர் சுவாமி சன்னதி தாண்டி சிறிது தூரம் அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது பெற்றோர்கள் வேகமாக முன்னால் சென்றுவிட அவர்களுக்கு பின்னல் தனது தாத்தாவுடன் கௌசிக் என்ற 5வயது சிறுவன் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்துள்ளான். அப்போது, வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை (leopard) ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனைக் கவ்விக்கொண்டு வனப்பகுதிக்குள் ஓடியது.
அதையடுத்து, வனப்பகுதிக்குள் சுமார் 500 அடி தூரம் சிறுவனை சிறுத்தை தூக்கி சென்ற நிலையில், சப்தம் போட்டபடி சிறுத்தையை பக்தர்களும் அந்த பகுதியில் காவலில் ஈடுபட்டிருந்த போலீசாரும் விரட்டிச் சென்றனர். இந்த நிலையில், அந்த பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர் ஒளியை காட்டியதும் பயத்தில் சிறுத்தை சிறுவனை அங்கேயே விட்டுச் சென்றது.
உடனடியாக அங்கிருந்து சிறுவனை மீட்ட போலீசார் சிறுவன் கௌசிக்கை சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்தின் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், படுகாயம் அடைந்த சிறுவனுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சிறுவனைக் கவ்விச் சென்ற அந்த சிறுத்தையை பிடிக்க நேற்று இரவு வனத்துறையினர் மூன்று கூண்டுகளை அமைத்திருந்தனர். நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் அவற்றில் ஒரு கூண்டில் சிறுத்தை நுழைந்து சிக்கிக்கொண்டது.
இதையடுத்து, அந்த சிறுத்தை குட்டியை அங்கிருந்து கூண்டோடு அப்புறப்படுத்தி வேறு பகுதியில் கொண்டு சென்று விடுவிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.