கனமழை பாதிப்புகள் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று (டிச.20) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதீத மழை கொட்டித் தீர்த்தது.
இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள காரணத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இந்நிலையில், தற்போது வெள்ளம் வடிந்து வந்தாலும் மக்கள் பாதிப்புகளில் இருந்து முழுவதுமாக மீளவில்லை.
இந்த நிலையில் கனமழை பாதிப்புகள் காரணமாக இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் துறை தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.