நவம்பர் (01.11.23) ஆம் தேதி புதன்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1ம் தேதி தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைந்த தினம். இந்த நாளை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கேரளாவோடு இணைக்கப்பட்ட பகுதிகளாக தமிழர்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்த, தமிழகத்தின் பூர்வீகப் பகுதியான, பீருமேடு, கல்குளம், தோவாளை, அகஸ்தீஸ்வரம், நெய்யாற்றின்கரை, விளவங்கோடு, தேவிக்குளம் ஆகியவை இருந்தன.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் தமிழக மக்கள் ஆதிக்க சக்தியின் அடக்குமுறையால் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் கடும் அவதியுற்றனர். இவர்கள் அனைவரும் தாங்கள் வாழ்ந்து வரும் பகுதியைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இவர்களுக்காக குரல் கொடுத்த “குமரியின் தந்தை” என அழைக்கப்படும் தியாகி மார்ஷல் நேசமணி பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். அதன் விளைவாக 1956 நவம்பர் 1ம் தேதி விளவங்கோடு, தோவாளை, கல்குளம், அகஸ்தீஸ்வரம் ஆகிய தாலுக்காக்கள், செங்கோட்டையில் பாதி தாலுக்கா தமிழகத்துடன் இணைக்கப்பட்டன.
இதுவே இன்று தமிழகத்தின் எல்லையாக வரலாற்றில் சிறந்து விளங்குகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைந்த தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நவம்பர் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.