துபாய் அரசரின் 6-வது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ரூ. 5,525 கோடி ஜீவானம்சம் வழங்கவேண்டும் என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துபாய் அரசர் ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்தூம். இவரது 6-வது மனைவி ஹயா பின்ட் அல் ஹூசைன். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஹயா பின்ட் ஜோர்டன் மன்னர் அப்துல்லாவின் உறவினர் ஆவார்.
இதற்கிடையே துபாய் அரசருக்கும், ஹயா பின்ட் அல் ஹூசைனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ஹயா பின்ட் கடந்த மே மாதம் தலைமறைவானார்.
இந்த நிலையில் ஹயா பின்ட் தனக்கு கட்டாயத் திருமணம் நடத்தப்பட்டதாகவும், பாதுகாப்பு கேட்டு லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விவாகரத்து விசாரணை நடந்த போது தனது குழந்தைகளை துபாய்க்கு அனுப்புமாறு அரசர் ஷேக் முகம்மது தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை லண்டன் கோர்ட்டு ஏற்க மறுத்துவிட்டது.
இந்த நிலையில் வழக்கு விசாரணையின் போது ஹயா நீதிமன்றத்தில் கூறும் போது, ‘நான் உண்மையில் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன். குழந்தைகளும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றும் வாக்குமூலம் அளித்தார். அவர் சுமார் 7 மணி நேரம் தனது தரப்பு வாதத்தை முன்வைத்து பேசினார்.
இதையடுத்து துபாய் அரசரின் 6-வது மனைவி தொடர்ந்த விவாகரத்து வழக்கில் லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் துபாய் அரசர் ஷேக் முகம்மது ஜீவனாம்சமாக ஹயா பின்ட் மற்றும் 2 குழந்தைகளுக்கு 550 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 5,525 கோடி) வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி தனது தீர்ப்பில் கூறும்போது, தாம்பத்தியத்தில் ஏற்பட்ட முறிவு காரணமாக ஹயா பின்ட் இழந்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஹயாவின் பிரிட்டீஸ் மாளிகையை பராமரிக்கவும், குழந்தைகளின் கல்விக்காகவும், அவர்களது பராமரிப்புக்காகவும், 2 குழந்தைகளும் பெரியவர்கள் ஆனதும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து துபாய் அரசரின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, ‘அரசர் தனது குழந்தைகளுக்கு வழங்கப்படுவதை எப்போதும் உறுதி செய்துள்ளார். ஊடகங்கள் அவர்களின் தனி உரிமையை மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்றார். இங்கிலாந்து வரலாற்றில் இதுதான் மிகப்பெரிய ஜீவனாம்சம் தொகை என்று கருதப்படுகிறது.