ஆம்பூர் அருகே தந்தையுடன் இருசக்கரவாகனத்தில் பள்ளிக்கு சென்ற மாணவிகள் கண்டெய்னர் லாரி மோதியதில் இருவரும் உடல் நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி இவருக்கு மகள்கள் இருந்தனர். மூத்த மகள் ஜெய ஸ்ரீ ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் இவரது இளைய மகள் வர்ஷா ,8 ஆம் வகுப்பு படித்து வந்தார்
இன்று காலை தண்டபாணி தனது இரு மகள்களையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றார். ஆம்பூர் ஓ.ஏ.ஆர்.திரையரங்கம் அருகில் உள்ள சிக்னலில் நின்று கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் கர்நாடகாவிலிருந்து வேலூர் நோக்கி அதிவேகத்தில் வந்த கண்டெய்னர் லாரி ஒன்று தண்டபாணியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி சர்வீஸ் சாலையில் பாய்ந்தது.
இந்த கோர விபத்தில் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த மாணவிகள் ஜெயஸ்ரீ மற்றும் வர்ஷா ஆகியோர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த தண்டபாணியை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,. விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் லாரியில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகின்றது.
சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர்
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
இந்த லாரி தறி கெட்டு ஓடி சர்வீஸ் சாலையில் பாய்ந்த போது அதில் உள்ள கண்டெய்னர் சாலையில் கவிழ்ந்தது. அதிர்ஷடவசமாக அங்கு வாகன ஓட்டிகளோ பாதசாரிகளோ இல்லாததால் கூடுதல் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
பள்ளி நேரங்களில் நகர் பகுதிகளில் கண்டெய்னர் லாரிகள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில் விதியை மீறி இயக்கப்பட்ட கண்டெய்னர் லாரியால் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டினர்.
காவல்துறையினர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் இது போன்ற கனரக வாகனங்களை நகருக்குள் அனுமதிக்காமல் இருக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தந்தையுடன் இருசக்கரவாகனத்தில் பள்ளிக்கு சென்ற மாணவிகள் கண்டெய்னர் லாரி மோதியதில் இருவரும் உடல் நசுங்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏறடுத்தி உள்ளது.