பாஜக கொடிக் கம்ப விவகாரத்தில் அமர்பிரசாத் ரெட்டிக்கு (amar prasad reddy) உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.
சென்னை பனையூரில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகில் சுமார் 50 அடி உயரம் கொடிக்கம்பம் நட முயன்ற போது அப்பகுதி மக்கள் அங்கு மத வழிபாட்டு தலம் இருப்பதன் காரணமாக தேவையில்லாத சர்ச்சை ஏற்படும் மற்றும் தேவையற்ற சட்டஒழுங்கு ஏற்படும் கூறி அதற்க்கு மறுப்பு தெரிவித்தனர்.
மேலும் அப்பகுதி பொதுமக்கள் கொடிக்கம்பம் நட மறுப்பு தெரிவித்த நிலையில்,மாநகராட்சி அதிகாரிகள் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.மேலும் தடையை மீறி கொடிக்கம்பம் நட முயன்ற போது இஸ்லாமிய அமைப்புகளும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்ற ஜேசிபி வாகனத்தை போலீசார் வரவழைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 5 பாஜக நிர்வாகிகள் ஜேசிபி வாகனத்தின் கண்ணாடியை உடைத்தனர்.
இதனை தொடர்ந்து அக்டோபர் 20 ஆம் தேதி பாஜக கொடி கம்பத்தை அகற்றிய வழக்கில் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். பின்னர், அனைவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், அமர் பிரசாத் ரெட்டி தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று (நவ.10) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி அவர் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், ஜேசிபி வாகனத்தை சேதப்படுத்தியதற்காக எத்தனை நாட்கள் சிறையில் வைத்திருப்பீர்கள் ? என கேள்வி எழுப்பிய நீதிபதி கார்த்திகேயன், சேதப்படுத்தப்பட்ட ஜேசிபி வாகன உரிமையாளருக்கு ரூ.12000 வழங்கவும் உத்தரவிட்டார்.