Madurai Chithirai Festival-மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் கணவரை இழந்தவர் செங்கோல் பெறக்கூடாதா? என்றும் ,இது போன்று எந்த ஆகம விதியில் உள்ளது? என்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்விஎழுப்பியுள்ளது.
மதுரை சித்திரை திருவிழா:
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் .அந்த வகையில், இந்த ஆண்டும் சித்திரை திருவிழா ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவமும் ( மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது காலை வெள்ளி சிம்மாசனத்திலும் மாலை தங்க அம்பாரியுடன் யானை வாகனத்திலும் அம்பாள் மாட வீதிகளில் உலா வருவார்) மற்றும் ஏப்ரல் 22 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேர் உற்சவமும் அன்றைய தினம் கள்ளழகர் எதிர்சேவையும் நடைபெறும்.
மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண மதுரை மாநகருக்கு லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள்.
கோவில்களில் சொல்லப்படும் ஆகம விதி:
பொதுவாக சிதம்பரம் நடராசர் கோவில் , ஸ்ரீ ரங்கம் , மீனாட்சி அம்மன் கோயில்களில் ஆகம விதிகளின்படி பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில்,உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்விலும், ஆகம விதிகள் பின்பற்றப்படுகிறது . அப்படி திருவிழாவின் 8-ம் பட்டாபிஷேகம் அன்று, மீனாட்சியம்மனிடம் செங்கோல் வழங்கப்படும்.
அந்த செங்கோலை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் பெற்றுக் கொள்வார்.ஆகம விதியின் படி திருமணம் ஆகாதவரோ,கணவன் அல்லது மனைவியை இழந்தவரோ செங்கோலை பெற்றுக் கொள்ள இயலாது என்பது ஐதீகம்..
இதையும் படிங்க: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!!
செங்கோல் வழக்கு :
முன்னதாக மதுரை சேர்ந்த தினகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி குறித்து வழக்கு தொடர்ந்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் அளித்த மனுவில்,” ,மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை விழாவின் 8 -ஆம் நாள் பட்டாபிஷேகம் அன்று செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியில் கணவனை இழந்தவருக்கு செங்கோல் வழங்க கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தற்பொழுது அறங்காவலர் குழு தலைவராக இருப்பவர் ருக்மணி பழனிவேல் ராஜன்.இவர் திமுக அரசின் தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் தாயார் ஆவார் . ருக்மணி பழனிவேல் ராஜன் கணவரை இழந்தவர் என்பதால் கோயில் விதிகளை அதாவது ஆகம விதிகளை பின்பற்றி அவரிடம் செங்கோலை வழங்க இயலாது. வேறு தகுதியான நபரிடம் செங்கோலை வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
சராமரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி:
மேலும் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி நீதிபதி சரவணன்,” கோயிலுக்குள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? செங்கோல் வாங்குபவரும் இந்து தானே? கணவனை இழந்தவர் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது? குறிப்பாக விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டுள்ள கடைசி நேரத்தில் வழக்கை தொடர்ந்திருப்பது ஏன்? என சராமரியாக கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், ” இந்தக் காலத்திலும் இதுபோல கருத்துக்களை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல என குறிப்பிட்ட நீதிபதி நீதிபதி சரவணன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.