மதுரை எம்ய்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வர மிகப்பெரிய அளவில் போராட வேண்டிய இருக்கிறதென மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் மீனாட்சி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் 30 இலட்ச ரூபாய் மதிப்பில் மாணவிகள் உணவு அருந்தும் கூடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கல்லூரி மாணவிகளுடன் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறுகையில் “
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் 3 நாட்களாகச் செயல்படாத காரணத்தால் மாணவர்கள் போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை, மத்திய பணியாளர் தேர்வாணையத் தலைவருக்கு இன்று கடிதம் எழுதி உள்ளேன், மத்திய பணியாளர் தேர்வாணைய இணையதளத்தைச் சரி செய்ய வேண்டும், விண்ணப்பம் செய்ய வேண்டிய தேதிகளை நீட்டிக்க வேண்டும்.
சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் எனச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது, மத்தியப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்தி வழக்காடு மொழியாக மாற்றிப் பல ஆண்டுகள் ஆகிறது.
தமிழகத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்ற ஒன்றிய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது, இந்தி அல்லாத மொழிகளைச் சமத்துவமாக நடத்த ஒன்றிய அரசு மறுத்து வருகிறது, எம்ய்ஸ் மருத்துவமனை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால் ஒன்றிய சுகாதார அமைச்சர் திசை திருப்பி பேசுகிறார்.
தமிழ்நாட்டின் கழுத்தை எப்படி நெருக்குவது என எங்களுக்குத் தெரியும் என ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகப் பேசுகிறார், தமிழ்நாட்டை ஒன்றிய அரசு மாற்றான் தாய் மனப்போக்குடன் நடத்தி வருகிறது.
மதுரை எம்ய்ஸ் உடன் அறிவிக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது, மதுரை எம்ய்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வர மிகப்பெரிய அளவில் போராட வேண்டிய இருக்கிறது.
மக்கள் பிரதிநிதிகள் எப்படியாவது மதுரை எம்ய்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வருவோம், ஒன்றிய அரசை எதிர்த்துப் பேசினால், போராடினால் அவர்களை ஒன்றிய அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது” எனக் கூறினார்.