கனமழை காரணமாக மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தூத்துக்குடி, நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி மதுரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதேபோல் மழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தூத்துக்குடி மற்றும் நாமக்கல்லில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பிதுள்ளனர்.
இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும், இதர தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என்றும் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.