மணிப்பூர் சம்பவத்தை பார்க்கும் போது பிரதமர் இருக்கிறாரா..? இல்லையா..? என்ற கேள்வி எழுகிறது என்றும், பிரதமர் இரு பிரிவினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும் எனவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி அளித்துள்ளார்.
மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் செய்தியர்களிடையே பேசும்போது;
மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் சம்பவம் உலகத்தையே உலுக்கியுள்ள கொடூரமான சம்பவம். மணிப்பூர் இந்தியாவில் தான் உள்ளதா என கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அரசு இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடந்தியிருந்தால் இத்தகைய பெரிய சம்பவங்கள் மணிப்பூரில் நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது.
உலகநாடுகளுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, விருதுகளை வாங்கி கொள்ளும் பிரதமர் மோடி சொந்த நாட்டு மக்கள் கொலை செய்யப்படும் போது மெளனமாக இருந்தார்.
உச்சநீதிமன்ற தலையீட்டால் பிரதமரின் உதடுகள் மணிப்பூர் விவகாரத்தில் அசைந்துள்ளது. மணிப்பூர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதம் செய்ய பிரதமர் அச்சப்படுகிறார்.
மணிப்பூர் கலவரத்தை பிரதமர் விரும்புகிறாரா என தெரியவில்லை. மணிப்பூர் சம்பவத்தை பார்த்தால் நாட்டை பிரதமர் ஆளுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து 25ம் தேதி நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம், போராட்டம், ரயில் மறியல் நடைபெறும். விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் நான் கலந்து கொள்ள உள்ளேன்.
ஜனநாயக கொள்கைகளை முன்னிறுத்தி இந்தியா கூட்டணி உருவாகி உள்ளது. பல்வேறு கட்சிகளை உடைத்து சேர்த்துள்ள கூட்டணியே பாஜக கூட்டணி. பல்வேறு கட்சிகளை உடைத்து அதிக எண்ணிக்கையிலான கட்சிகளை பிரதமர் ஒருங்கிணைத்துள்ளார்.
அதிமுக ஆட்சியின் போது குட்கா ஊழல் செய்த எடப்பாடி பழனிச்சாமியை பக்கத்தில் வைத்து கொண்டு எதிர்க்கட்சிகளை ஊழ கூட்டணி என பிரதமர் விமர்சிக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தவறால் கச்சத்தீவு அன்று தாரை வார்க்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி செய்த தவறை பிரதமர் மோடி 10 ஆண்டுகளில் சரி செய்திருக்க வேண்டும்.
மத்திய அரசு துறைகளை தவறான வழியில் குறுக்கு வழியில் பன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஓடுக்க நினைக்கிறார்கள். தங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் துறையாக அமலாக்கத்துறை மாற்ற மிஸ்ராவை மீண்டும் நியமித்தார்கள்.
தொடர்ந்து நேரு குடும்பம், கர்நாடக காங்கிரஸ், திமுக அமைச்சர்கள் மீது ரெய்டு விடப்படுகிறது.
எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த, உடைக்க, குழப்பம் ஏற்படுத்த அமலாக்கத்துறை, வருமானவரித்துறை பயன்படுத்தப்படுகிறது. மோடி ஆட்சியில் மக்களின் நம்பிக்கையான நீதிமன்றமே கேள்விக்குறியாகி விட்டது.
தமிழக அரசு முதியோருக்கான உதவித்தொகையை அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது.
விலைவாசி உயர்வுக்கு காரணம் மாநில அரசா ஒன்றிய அரசா.
பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் தான் எல்லா பொருட்களின் விலையும் உயரும். அண்ணாமலை மத்திய அரசிடம் பேசி விலைவாசியை குறைக்க வேண்டும். தமிழக பாஜக விலைவாசியை குறைக்கச்சொல்லி டெல்லிக்கு சென்று தான் போராட வேண்டும். தமிழகத்தில் போராடுவது தேவையற்றது.
ஒருகோடி பெண்களுக்கு மகளிர் உதவித்தொகை கிடைக்கும் என கூறியிருக்கிறார்கள். இதில் இன்னும் பிரச்னை இருக்குமானால் அரசு பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளோம்.
மணிப்பூரில் கலவரத்தின் மூலமாக குறிப்பிட்ட சமூக வாக்குகளை பெறலாம் என்பதால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற அனுமதிக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குஜராத் வன்முறையையும் இவ்வாறு செய்தே வாக்குகளை பெற்றார்கள் என பேசினார்.