விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, தேனி மாவட்டம், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பதினெட்டாம் கால்வாய், PTR கால்வாய், தந்தை பெரியார் கால்வாய் மூலம் விவசாயப் பாசனத்திற்கு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட விடியா திமுக அரசை வலியுறுத்தி, தேனி மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (14.12.2023) வியாழக் கிழமை நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
“தமிழ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் விடியா திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து அனைத்து வகைகளிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக விவசாயப் பெருங்குடி மக்கள் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்வதற்குத் தேவையான தண்ணீரை குறித்த காலத்தில் திறந்துவிடுவதற்கு விடியா திமுக அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் தவிக்கின்றனர்.
அந்த வகையில், தேனி மாவட்டம், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து விவசாயத்திற்கான தண்ணீர், கம்பம் தொகுதி, உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள பதினெட்டாம் கால்வாய், PTR கால்வாய், தந்தை பெரியார் கால்வாய்களில் இருந்து 60-க்கும் மேற்பட்ட கண்மாய்களில் தண்ணீரை நிரப்பி, அதன்மூலம் சுமார் 11 ஆயிரத்து 600 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெற்று வருகின்றன.
கழக ஆட்சிக் காலங்களில் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயப் பெருங்குடி மக்களுக்கு குறித்த காலத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தன. விவசாயிகள் எவ்வித சிரமமும் இன்றி தங்கள் நிலங்களில் விவசாயம் செய்து சிறப்பாக வாழ்ந்து வந்தனர்.
ஆனால், தற்போதைய விடியா திமுக அரசு மேற்படி கால்வாய்களில் உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்காத காரணத்தால், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தண்ணீர் திறந்துவிட வேண்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், விடியா திமுக அரசிடமும் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும், தங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என விவசாயிகள் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவிக்கின்றனர்.
தங்களுடைய சுயநலத்திற்கு மட்டும் துரிதமாக செயல்படும் இந்த விடியா ஆட்சியாளர்கள், விவசாயிகள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்து வருவதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பதினெட்டாம் கால்வாய், PTR கால்வாய், தந்தை பெரியார் கால்வாய் மூலம் விவசாயப் பாசனத்திற்காக உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட விடியா திமுக அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தேனி மேற்கு மாவட்டத்தின் சார்பில், 14.12.2023 வியாழக் கிழமை காலை 10.30 மணியளவில், உத்தமபாளையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு. R.B. உதயகுமார், M.L.A., அவர்கள் தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளரும், தேனி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான திரு. S.T.K. ஜக்கையன், Ex. M.P., அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தேனி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கழக உடன் பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கும்; விவசாய விரோத விடியா திமுக அரசைக் கண்டித்தும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களும், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.