Mattu Pongal – மாட்டுப் பொங்கலையொட்டி, உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில் மகா நந்திக்கு 2,000 கிலோ எடையிலான இனிப்பு வகைகள், பழங்கள், காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.
உலக மக்களைக் கவர்ந்திருக்கும் பெரிய கோயிலின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் பெரிய நந்தி இருந்து வருகிறது.
கோயிலுக்கு வருபவர்கள் நந்தியைத் தவறாமல் தரிசித்து செல்வார்கள்.மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப் புகழ்பெற்று திகழ்ந்துவருகிறது.
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பிறகும் விண்ணோக்கி உயர்ந்திருக்கும் விமான கோபுரத்துடன் அழகுறக் காட்சி கொடுத்துக்கொண்டிருக்கிறது.
உலக பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாகவும் யுனெஸ்கோவால் அங்கீரிக்கப்பட்டிருக்கிறது.
உலகம் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினமும் ஆயிரகணக்கான சுற்றுலாப்பயணிகள் பெரிய கோயிலுக்கு வருகின்றனர்.
ஒவ்வொரு பிரதோஷ தினத்திலும் மாலை நேரத்தில் நந்திக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
அதில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நந்தியை தரிசிப்பது வழக்கம்.
இந்த நிலையில், மாட்டுப் பொங்கலையொட்டி(Mattu Pongal ) , உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில் மகா நந்திக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
12 அடி உயரம். 19.5 அடி நீளம். 8.25 அடி அகலம் கொண்ட மகா நந்திகேசுவரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
Also Read :https://x.com/ITamilTVNews/status/1747161730705465844?s=20
பின்னர், மகா நந்திகேசுவர ருக்கு உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பாகற்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகள், ஆரஞ்சு, சாத்துக்குடி, வாழை, ஆப்பிள் போன்ற பழ வகைகள்,
இனிப்புகள், செவ்வந்தி, ரோஜா போன்ற மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த எடை 2,000 கிலோ என தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, நந்திகேசுவரருக்கு சிறப்பு ஆராதனையும், பின்னர் கோ பூஜையும் நடைபெற்றது.
இதில் பசு, கன்றுக்கு சந்தனம், குங்குமப் பொட்டு வைத்து, மாலைகள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து பசுவுக்குப் பொங்கல் ஊட்டப்பட்டது.
ஆண்டுதோறும் ஒரு டன்னுக்கு மேல் காய்கனிகள், இனிப்பு, மலர்களைக் கொண்டு வெகு விமரிசையாக நடைபெறும் இவ்விழா கடந்த ஆண்டைபோல, நிகழாண்டும் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ,ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.