Durai.Vaiko broke down :
சின்னம் கிடைக்காத மதிமுக…
சூரியனில் போட்டியிட வற்புறுத்தும் உ.பி.க்கள்…
உடைந்து அழுத துரை.வைகோ..!
இது அமைச்சர் நேருவின் விளையாட்டா?
ஒருபக்கம் சீட் கிடைக்காத மன உளைச்சலால் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கும் ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி பிரச்சனையே மதிமுகவினரின் சோக ரணத்தை கீறிக் கொண்டிருக்க, திமுகவினர் முன்னிலையில் குமுறி அழும் வைகோவின் மகனும் திருச்சி வேட்பாளருமான துரை வையாபுரியின் வீடியோ ஒன்றும் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையே, “தலைவரே, நமக்கு வேட்டு வைக்கப் போறதே அமைச்சர் நேருதான். அவருதான் இவ்வளவுக்கும் காரணம்” என ஓயாமல் கதறும் கட்சியினரின் தொலைபேசி அழைப்புகளால் கண்கள் சிவக்க கோபத்துடன் இருக்கிறாராம் வைகோ.
என்னதான் நடக்கிறது திருச்சியில்..?
ஆரம்ப காலத்தில் திமுகவின் கொள்கையை பரப்பும் பீரங்கியாக இருந்து வந்த வைகோ பின்னர், திமுக தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 1994 ஆம் ஆண்டு துவக்கப்பட்டதுதான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்.
1996 சட்டமன்ற தேர்தலை முதன்முதலில் சந்தித்த மதிமுக, அதில் வெற்றி பெறவில்லை என்றாலும், 1998 மக்களவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்து 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அடுத்து ஒரே ஆண்டில் மீண்டும் நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் திமுக – பாஜக கூட்டணியில் இணைந்து பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டு 6 சதவீத வாக்குகளோடு 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
2001 சட்டமன்ற தேர்தலில் தனித்து களம்கண்ட மதிமுக ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறாத நிலையில், அதன் வாக்கு வங்கியும் 6 சதவீதத்தை விடக்குறையவே மதிமுகவிற்கு வழங்கியிருந்த அங்கீகாரத்தை திரும்ப பெற்றுக் கொண்டது தேர்தல் ஆணையம். ஆனாலும், அடுத்தடுத்து நடந்த தேர்தல்கள் சிலவற்றில் பம்பரம் சின்னத்தையே விண்ணப்பித்து பெற்றுக் கொண்டது மதிமுக.
ஆனால், தற்போது மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் கிடைத்த ஒரேயொரு தொகுதியான திருச்சியில் தன் மகன் துரை வையாபுரியை களமிறக்கி இருக்கும் வைகோவிற்கு சின்னம் ஒதுக்கப்படாத காரணத்தால் பிரச்சாரத்தை துவக்குவதே பிரச்சனையாகி இருக்கிறது.
அதே போல, மதிமுகவுக்கு ஒத்துழைப்பு தர வேண்டிய திருச்சி மாவட்ட திமுகவை சேர்ந்த முக்கியப் புள்ளிகள் அனைவருமே அமைச்சர் கே.என். நேருவின் மகனுக்காக பெரம்பலூர் தொகுதியில் குவிந்திருப்பதால் விரக்தியில் இருக்கிறார்கள் வைகோ உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள்.
இதற்கிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த தேர்தல் தொடர்பான செயல் வீரர்கள் கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் அன்பில் மகேஷ் முன்னிலையிலேயே உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என வலியுறுத்தி பேசவே, அதைக் கேட்டு துரை.வைகோ உடைந்து கண் கலங்கிய சம்பவம் அரசியல் களத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.
“என்ன சின்னத்துல போட்டி போடப் போறீங்கன்னு சொல்லுங்க” என அந்தக் கூட்டத்தில் உடன் பிறப்பு ஒருவர் கேட்க, “ஆமா, முதல்ல அதைச் சொல்லுங்க, அதைச் சொல்லுங்க..” என கோரசாக பலரும் கேட்கவே வைகோவின் மகன் மனம் நொந்து பேசும் அந்த வீடியோவில் இருப்பது இதுதான்…
இப்படி அவர் ஆதங்கத்துடன் பேசியதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறுகிறார்கள் திருச்சி அறிவாலயத்திற்கு நெருக்கமான நபர்கள். இது குறித்து நம்மிடம் பேசிய அவர்கள்,
“அமைச்சர் நேருவின் மகனுக்கு பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வாய்ப்பு கிடைத்திருப்பதால், முன் எப்போதையும் விட இந்த தேர்தலில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் நேரு.
தவிர, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள பெரம்பலூர், முசிறி, துறையூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், குளித்தலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் லால்குடி, மண்ணச்ச நல்லூர், துறையூர் ஆகிய 3 தொகுதிகள் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்டவையாக இருப்பதால் திமுக மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் அருண் நேருவுக்கு வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால், இவர்களோடு சேர்ந்து மற்ற அனைவருமே பெரம்பலூரில் குவிந்து இருப்பதுதான் வேதனை.
அன்றைக்கு நடந்த செயல் வீர்ர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட புதுக்கோட்டை அமைச்சர் ரகுபதிகூட நேருவைத்தான் நம்பி இருப்பது போல பேசுகிறார். ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.வான பழனியாண்டியும் கூட, “பிள்ளையாரை சுற்றுவது போல அமைச்சர் நேருவை சுற்றி சுற்றி வாருங்கள் ஜெயித்து விடலாம்” என்று கூறுகிறார். ஆனால், நேரு பெரம்பலூரிலேயே சுற்றிக் கொண்டிருந்தால் என்னதான் செய்வார் மதிமுக வேட்பாளரான துரை வையாபுரி?
இது ஒரு பக்கம் இருந்தாலும், “உதய சூரியனில்தான் போட்டி இடவேண்டும்” என்ற பிரச்சனையை தூண்டி விட்டதே திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளரான வைரமணிதான் என்பது பலருக்கும் தெரியும். இதே வைரமணிதான், பெரம்பலூரில் நேருவின் மகனுக்கு மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்திருக்கிறார்.
அவர் கூறியதை கேட்டுத்தான், “எந்த சின்னம்னு இப்பவே சொல்லுங்க..” என துரை வைகோவிடம் கூட்டத்திலேயே அடம் பிடிக்கிறார் ஒரு ஒருவர் ஆக, மொத்தத்தில், “உதய சூரியன் சின்னத்தில் நின்றால் மட்டுமே வேலை செய்வோம்” என்பதை சொல்லாமல் சொல்லி விட்டனர் திருச்சி திமுகவினர்” என ரகசியம் கக்கினார் அந்த உடன்பிறப்பு.
ஒரு வேளை பம்பரம் சின்னத்தில் நின்று துரை வையாபுரி தோல்வியை தழுவினாலும், “நடந்த சம்பவத்திற்கு கம்பெனி பொறுப்பில்லை”என நாசூக்காக நழுவிக் கொள்வதற்காகவே ஆரம்பத்திலேயே இந்த நாடகத்தை அறங்கேற்றி இருக்கிறது நேரு தரப்பு.
பாவம், அரசியல் அனுபவம் இல்லாததால், “போட்டியிட்டால் எங்க சின்னம் தான்” உணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டார் வைகோவின் மகன்” என்கிறார்கள் திருச்சி அறிவாலயத்திற்கு நெருக்கமான அந்த உடன் பிறப்புகள்.
இது ஒருபுறம் இருக்க, “வாக்காளர்கள் ஓட்டு போடுவது திமுகவையும், லோக்கலில் இருக்கும் எங்களையும் நம்பித்தான். சின்னம் கிடைக்காத சூழலில் உதயசூரியனில் போட்டியிட்டால் என்ன தவறு என்பதற்காகத் தான் அப்படிக் கேட்டோம் Durai.Vaiko broke down.
ஆனால், இதற்கே இப்படி கொந்தளித்து பேசும் இவைரை ஜெயிக்க வைத்து விட்டால், இன்னும் என்னவெல்லம் பேசிவாரோ? அதுனால, வேட்பாளரை மாற்றச் சொல்லுங்கள். திருச்சியில் இருக்கும் மதிமுகவினர் யாருக்காவது அந்த வாய்ப்பு கிடைத்தால் ரொம்ப நல்லது அப்டீன்னு திமுக தலைமைக்கு தங்கள் நெருடல்களை தட்டி விட்டுக் கொண்டிருகிறார்கள் திருச்சி திமுகவினர்.
வரபோற பாராளுமன்ற தேர்தலுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதன்முதலில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்திய திருச்சியில் எதிரும் புதிருமாக நிற்கிறது திமுகவும் அதன் கூட்டணிக் கட்சியான மதிமுகவும்..!