பிரபலங்களின் துக்க வீட்டிலும் ஊடகங்கள் பல நேரங்களில் அத்துமீறி நடப்பதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் நாசர் (Actor Nasser)கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து விஜய் ஆண்டனியின் வீட்டில் குவிந்த பல ஊடகங்கள் துக்க வீட்டில் வந்தவர்களிடம் மைக் நீட்டி கருத்து கேட்டு அத்து மீறியதற்கு பல தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.
இதேபோல, முன்பு நடிகர் மாரிமுத்து இறந்த போதும் இதுவே நடந்தது.இதுமட்டுமல்லாமல், பல பிரபலங்களின் துக்க வீட்டிலும் ஊடகங்கள் பல நேரங்களில் அத்துமீறி நடப்பதற்கு தற்போது கடுமையான எதிர்ப்பு எழுந்து வருகிறது.
இந்த நிலையில்,தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நேற்று கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவரான நடிகர் நாசர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘திரையுலகில், நடிகர்களின் படைப்புகளும் செயல்பாடுகளும் பொதுமக்களின் பாராட்டுகளிலும், கவனிப்புகளிலுமே புகழடைகிறது. அதற்கு பெரும் பங்காற்றுவது ஊடகத்துறையும், ஊடகவியலாளர்களும்தான்!
ஆனால் சமீபத்தில் எதிர்பாராமல் மறைந்த மாரிமுத்து, விஜய்ஆண்டனி அவர்களின் மகள் இழப்பின் போது ஊடகத்துறை நண்பர்கள் நடந்துகொண்டது பலரையும் முகம் சுளிக்கவைத்துள்ளது. இறுதி நிகழ்வில் நடந்த ஊடகத் துறையினரின் செயல்பாடுகள் எல்லை மீறி பலரையும் சங்கடத்திலும், விமர்சனத்திற்கும் உள்ளாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறோம்.
துயரம் தரும் செய்திகள் சம்பந்தப்பட்டோரை சேரும் முன்பே, தவறான தகவலால் பரபரப்பாக்குவதையும், அதிர்ச்சியால் உடைந்து துயரத்தில் நிற்கும் குடும்பத்தை ஊடக நெருக்கடிக்கு உள்ளாக்குவதையும் எந்த விதத்தில் நியாயப்படுத்துவது? துயரத்தால் தாக்குண்டோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல வரும் கலைஞர்களையும், ஊடக பரபரப்பிற்கு உள்ளாக்குவது எந்த விதத்தில் சரியானது?
எதிர்பாராத இழப்பினால் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் குடும்பத்தினரும், துக்கம் விசாரிக்க வந்த உறவினர்களும் அவர்களுக்கு உதவ வந்த கலைத்துறை நண்பர்களும், ஊடக நெருக்கடியில் சிக்கி, இறுதி நிகழ்வுகளைக்கூட முழுமையாக செய்யவிடாமல் தடுப்பது எந்த விதத்தில் சரியானது?
கலைஞர்களின் இறுதி நிகழ்வை மக்களுக்கு கொண்டு சென்று நிரந்தர புகழ் சேர்க்கவேண்டும் என்ற ஊடக நண்பர்களின் செயல்பாட்டின் எல்லைகள் எதுவரை? எதிர் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க ஊடக செயல்பாட்டின் எல்லைகளை தீர்மானிக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
எங்கள் கலைஞர்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பொறுப்புணர்ந்து உங்களுக்குள் தீவிரமான சுயக்கட்டுப்பாட்டை ஊடகத் தோழர்கள் கொண்டு வர வேண்டும். அரசும் இதை கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்பதே எம் வேண்டுதல்’ என கூறியுள்ளார்.