மனிதர்களின் சிறுநீரை வைத்து எறும்புகள் (ants) மூலம் அவர்களுக்கு புற்றுநோய் இருக்கிறதா? என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
உலகம் முழுவதும் அச்சுறுத்தும் கொடிய நோய்களில் ஒன்று புற்றுநோய். மேலும், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி 6ல் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1 கோடி பேர் உலகம் முழுவதும் சுமார் 1 கோடி பேர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர் என 2020ம் ஆண்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படியான, சூழலில் இந்த கொடிய நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் அதனை சரி செய்துவிடலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், புற்றுநோய் இருக்கிறதா எனக் கண்டுபிடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்கு அதிக செலவாகும் என்பதால் சாமானிய மக்கள் பலர் இதனை பரிசோதிப்பதில்லை. மேலும், இந்த பரிசோதனைக்காக செலவு சாமானிய மக்கள் கொடுக்கும் வீட்டு வாடகையை விட அதிகம்.
இந்நிலையில்தான், எறும்பைக் (ants) கொண்டு புற்றுநோய் பாதிப்பை கண்டறியும் வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்க ஆய்வாளர்கள்.
இந்த ஆய்வு குறித்து வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது, “புற்றுநோய் கட்டிகள் கொந்தளிப்பான கரிம சேர்மங்களை ரசாயனங்களாக வெளியிடுகின்றன எனவும், இந்த ரசாயனங்கள் வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறுவதை வைத்து தான் எறும்புகள் அதன் மிகுந்த உணர் திறன் கொண்ட கொம்புகள் மூலம் கண்டுபிடிக்கின்றன எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் எறும்பின் கொம்புகள் நாயை விட அதிகளவில் மோப்ப சக்தி உடையது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த ஆய்வு எப்படி நடத்தப்பட்டது என்ற கேள்விக்கு…
முதலில், சோதனைக்கு உட்படுத்தப்படும் எறும்புகளை ஒரு பக்கம் அடைத்து வைத்து விட்டு மறுபக்கம் மார்பகப் புற்றுநோய் துண்டுகளை எலியின் உடலில் ஒட்டவைத்து அந்த எலிகளையும், சாதாரண எலிகளையும் தனித்தனியாக கண்ணாடிக் கூண்டுகளில் அடைத்து வைத்தோம்.
பின்னர், கூண்டிற்குள் இருக்கும் எலிகளின் சிறுநீருக்கு அருகில் ஒரு துளி சர்க்கரை கரைசல் விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த கூண்டிற்குள் ஃபார்மிகா மற்றும் ஃபுஸ்கா வகை எறும்புகள் விடப்பட்டது. மேலும், இந்த சோதனையில், 35 எலிகளுக்கு 35 எறும்புகள் கூண்டிற்குள் விடப்பட்டது.
இதனையடுத்து, சில எறும்புகள் சர்க்கரை கரைசலை சரியாக அடையாளம் கண்டு சாப்பிட்டுவிட்டது. ஆனால், சில எறும்புகள் சர்க்கரை கரைசலை அடையாளம் கண்டாலும் அதன் அருகிலேயே நீண்ட நேரம் சுற்றி சுற்றி வந்தது.
அதாவது, புற்று நோய் உள்ள எலிகளின் சிறுநீரின் அருகில் உள்ள சர்க்கரை கரைசலை எறும்புகள் சாப்பிடவில்லை. மேலும், இந்த சோதனையை திரும்பத் திரும்ப செய்து பார்த்ததில் எறும்பு ஒவ்வொரு முறையும் புற்று நோய் பாதிப்பு உள்ள எலிகளை சரியாக அடையாளம் காட்டியுள்ளது” என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆய்வு குறித்து பாரிஸின் ‘சோர்போன் பாரிஸ் நோர்ட் பல்கலைக்கழகத்தின்’ பேராசிரியர் பேட்ரிசியா டி எட்டோரே கூறுகையில், இந்த ஆய்வினை நாய்களை வைத்து கூட கண்டுபிடிக்க முடியும்.
ஆனால், அவற்றிற்கு குறைந்தபட்சம் 6 மாதமாவது அவைகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் ஆனால், எறும்புகளின் கொம்புகளுக்கு நாயை விட அதிக மோப்ப சக்தி இருப்பதால் அவை விரைவில் புற்றுநோயை கண்டுபிடித்து விடுகின்றன எனவும் கூறியுள்ளார்.
மேலும், இந்த ஆய்வு தற்போது மனிதர்களிடம் நடத்தப்பட்டு வருகிறது எனவும், இது வெற்றியடைந்தால் உலகில் மாபெரும் மருத்துவ மாற்றங்கள் ஏற்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.