திருப்பூரில் மர்ம நபர் ஒருவர் மனநலம் குன்றிய பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சாலையோரம் உள்ள மழை நீர் வடிகால் பாதையில் அடையாளம் தெரியாத பெண் உயிரிழந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் அந்த பெண்ணின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் அவிநாசி மங்கலம் சாலை பகுதியில் மனநலம் குன்றிய நிலையில் சுற்றி வந்த ஆதரவற்ற பெண் என்பது தெரியவந்தது. இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் சாலையின் மறுபுறம் இருந்த, எலக்ட்ரிக்கல் கடை வாசலில் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்ட இடம் வரை இழுத்துச் செல்லப்பட்டதற்கான இரத்தக் கறை இருப்பதையும் கவனித்த காவல் துறையினர், அந்த எலக்ட்ரிகல் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை உடனடியாக ஆய்வு செய்தனர்.
சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த அந்த வீடியோவில்,
பூட்டியிருந்த எலக்ட்ரிக்கல் கடை வாசலில், கொலை செய்யப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, தலையில் துணியை சுற்றிக்கொண்டு வந்த மர்ம நபர், அப்பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்கிறார்.
அதன் பின்னர் உடனடியாக அந்த பெண்ணின் காலை பிடித்து புதர் மறைவில் இருக்கும் பகுதிக்கு தரதரவென இழுத்துச் செல்கிறார். பின்னர், அங்கிருந்து சென்ற அந்த நபர் மீண்டும் அரை மணி நேரத்திற்கு பின் எலக்ட்ரிக்கல் கடை முன் வந்து நின்று அங்கு அந்தப் பெண் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு செல்கிறார்.
இந்த சிசிடிவி காட்சியை வைத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் , சம்பவ இடத்திற்கு தடையவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டனர். கொலையாளி யார் என்பது குறித்தும், உயிரிழந்த பெண் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டாரா எனவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதுகுறித்த விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் புஸ்பபுதூர் பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஹில்டன் என்பவர் தான் அந்த பெண்னை கொலை செய்தது தெரியவந்தது. கடந்த 2 மாதங்களாக அவிநாசி பகுதியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்த ஹில்டன், மது போதையில் ஆம்புலன்ஸ் ஓட்டியதற்காக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பணியில் இருந்து நீக்கப்பட்ட அன்று இரவு மனநலம் பாதித்த பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக தாக்கி கொலை செய்து கற்பழித்து விட்டு அவிநாசி-கோவை பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பில் மோதி படுகாயமடைந்தார். அங்கு அவரை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிகிச்சைக்கு பின்னர் அவரை கைது செய்ய இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.