தெற்கு அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக டிச. 3 வரை தமிழ்நாட்டு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அந்தமானை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நவம்பர் 27ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
அதன்படி தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நேற்று புயல் சின்னம் உருவாகியது. இந்த புயல் சின்னம்,வடமேற்கு திசையில் நகா்ந்து தென்கிழக்கு வங்கக் கடலில் வரும் நவ. 29 காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் இது அடுத்த 2 நாள்களில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயலுக்கு மியான்மர் நாடு பரிந்துரை செய்த ‘மிக்ஜாம்’ என்ற பெயர் சூட்டப்படும். இந்தப் புயல் தமிழ்நாட்டிற்கு வருமா அல்லது ஆந்திரம், வங்கதேசம் நோக்கி நகருமா என்பது இன்னும் இரண்டு நாள்களில் துல்லியமாகத் தெரியவரும் என்று சென்னை வானிலை மையம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த புயல் காரணமாக இன்று தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும், நாளை தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் இன்று கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.