நாங்குநேரியில்(nanguneri) சாதிய பாகுபாட்டால் சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவரையும், அவரின் சகோதரியையும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு அரசு பள்ளியில் 12&ஆம் வகுப்பு பயிலும் சின்னத்துரை என்ற மாணவரை, அவருடன் படிக்கும் மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளது.
படுகாயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை பார்த்த அவர்களது உறவினர் கிருஷ்ணன் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

மேலும் பள்ளி மாணவன் வெட்டுப்பட்ட வழக்கில் ஏற்கனவே மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்,திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவரையும், அவரின் சகோதரியையும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த சந்திப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
நாங்குநேரியில் சாதி எனும் நஞ்சால் பாதிக்கப்பட்டு, தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவரையும், அவரின் சகோதரியையும் சந்தித்து ஆறுதல் கூறி எப்போதும் உடனிருப்போம் என உறுதியளித்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.