11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி (anbil mahesh) விளக்கம் அளித்துள்ளார்.
2022 – 2023-ம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற்று கோடை விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், ஒரு மாத விடுமுறைக்கு பின்னர் ஜூன் மாதம் 1ம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், கடுமையான வெயில் காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 7-ம் தேதிக்கு பள்ளிகள் திறப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
அதன் பிறகும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி செல்சியஸ்க்கு மேல் அதிகரித்த நிலையில், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் சமூக வலைதளங்களின் பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததை அடுத்து, பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 6 முதல் 12 ஆம் வகுப்பிற்கு ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்து கோடை விடுமுறையை நீட்டித்தது.
இந்நிலையில், இன்று கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.
இதையடுத்து, இன்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலை பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் (anbil mahesh),
“கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜூலை மாதம் இறுதிக்குள் மாணவ மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி நிதிநிலைமை சரியான பின்னர் வழங்கப்படும். மேலும், 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து குறித்து மாநில கல்வி கொள்கை வடிவமைத்த பின்னர் அறிவிக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.