சாலை விபத்தில் உயிரிழந்த அரசு ஊழியரின் உடல் உறுப்பானது தானம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கானது நடைபெறும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன(masubramanian) தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்த வடிவேல் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு வயது 37 . இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதியன்று வேலை முடிந்து மாலை இரு சக்கர வாகனத்தில் வழக்கம் போல ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது தீடிரென சீலையம்பட்டி என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக குறுக்கே மாடு வந்ததால் வடிவேல் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்த வடிவேலு உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருந்ததால் இன்று அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது.
இந்த இறுதிச்சடங்கு நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்கிறார்.
(கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதியன்று உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் இறுதிச்சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது)