அமலாக்கத்துறை அதிகாரிகளால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி (Minister Senthil Balaji) திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகி உள்ளது.
ஏற்கனவே, வருமான வரித்துறை அதிகாரிகளால் 8 நாட்கள் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கியவர்களின் இடங்களில் சோதனை நடத்தப்பட்ட போதே, தொடர்ந்து அமலாக்கத்துறையின் சோதனையும் நடைபெறும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
அதன்படி, யூகித்தது பலித்த வண்ணமாய், கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் செய்த முறைகேடு தொடர்பான புகாரின் பேரில், நேற்று காலை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்கள் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், அதன் அடுத்த அதிரடியாக சட்டமன்றதில் உள்ள செந்தில் பாலாஜியின் அறையிலும் சோதனை மேற்கொண்டனர்.
இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வீடு, சட்டப்பேரவை அலுவலகம் என சுமார் 17 மணி நேரத்திற்கு நீடித்த சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை, அதன் தொடர்ச்சியாக விசாரணைக்காக செந்தில் பாலாஜியை அழைத்து சென்றனர்.
அச்சமயம் நெஞ்சுவலிப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி (Minister Senthil Balaji), கதறி அழுத நிலையில் உடனடியாக அவர் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது 6 வது மாடியில் உள்ள ICU-ல் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காதுக்கு பக்கதில் வீக்கம் இருந்ததாகவும், அவர் மயக்க நிலையில் இருந்தார் எனவும், ECG-ல் மாற்றங்கள் என அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் தெரிவித்து வந்த நிலையில், அவையெல்லாம் அதிகாரப்பூர்வ தகவல் என்றால் கேள்விக்குறி?
தற்போதைய தகவல் படி, ‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று பிற்பகலில் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூழல் இப்படி இருப்பினும், செந்தில் பாலாஜியை டெல்லி அழைத்து சென்று விசாரிக்கும் திட்டத்தில் அமலாக்கத்துறை இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன் வெளிப்பாடாக 11 மணியளவில் டெல்லி AIIMS மருத்துவர்கள் சென்னை வரவுள்ளனர். அவர்கள் கண்காணிப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி அழைத்து செல்லப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், அமைச்சர்களும் திமுக நிர்வாகிகளும் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் 10 மணியளவில் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார். அங்கு செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்துள்ளார்.
முன்னதாக, ஆழ்வார் பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ஒருபுறம் செந்தில் பாலாஜி கைது, இதற்கிடையில் டெல்லி அழைத்து செல்லும் தகவல், மறுபுறம் தீவிர ஆலோசனைகள் உள்ளிட்டவையால் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்படுமா? அதன் தொடர்ச்சியாக சம்மந்தப்பட்ட துறைகள் யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.