நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 55 லட்சம் பேர் கையெழுத்திட்டிருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்(udhayanidhi stalin) தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் நீட் தேர்வை திணிக்கும் மத்திய பாஜக அரசைகண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரி அக்டோபர் 21-ம் தேதி சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை திமுக இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாக 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகளைப் பெறும் வகையில் நடத்தப்படுகிறது.
இது குறித்து அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
நீட் விலக்கை வலியுறுத்தி இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி சார்பில்,இணைந்து நடத்தும் கையெழுத்து இயக்கம், அதன் இலக்கான 50 லட்சம் கையெழுத்துகளை குறிப்பிட்டக் காலக்கெடுக்குள்ளாகவே கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதுவரை இணைய வழியில் 40 லட்சம் – அஞ்சல் அட்டை மூலமாக 15 லட்சம் என 55 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன. தொடர்ந்து கையெழுத்திட்டு தமிழ்நாட்டு மக்கள் தங்கள் நீட் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
நீட் எதிர்ப்புணர்வு தமிழ்நாட்டில் பேரலையாய் திரண்டிருக்கிறது என்பதற்கான சான்று இது. எதிர்வரும் 17 ஆம் தேதி சேலம் இளைஞரணி மாநில மாநாட்டுக்குள் மேலும் பல லட்சம் கையெழுத்துகள் குவிகின்ற வகையில் நாம் தொடர்ந்து செயலாற்றுவோம்.
மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒற்றைக் கையெழுத்தை பெறுவதற்காக நாம் பெற்றுக் கொண்டிருக்கும் இத்தனை லட்சம் கையெழுத்துகளும் நீட் ஒழிப்பு வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.
தகுதி – தரம் என்று ஏமாற்றி நீட்டை திணிக்கும் பாசிஸ்ட்டுகள், அதற்கெதிரான ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.