கடந்த 24 மணி நேரத்தில் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த 18ஆம் தேதி இரவு காய்ச்சல், இருமல் மற்றும் சளி உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சுமார் ஒரு வாரத்திற்கு மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னதாக அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீராக இல்லை. விஜயகாந்திற்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. இன்னும் அவருக்கு 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் உடல் நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் பிரிதிவி மோகன்தாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “திரு விஜயகாந்த் அவர்களின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல் நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.