மதுரையில் மண்சரிவு ஏற்பட்டு உயிரிழந்த தொழிலாளர் சதீஷ் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மதுரை விளாங்குடி அருகே மாநகராட்சி பாதாள சாக்கடை கழிவு நீர் குழாய் பதிக்கும் பணியானது கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வந்துள்ளது, இந்த நிலையில் நேற்று காலை முதல் 3 தொழிலாளர்கள் அதற்கான பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் அமராவதி நகரைச் சேர்ந்த சதீஷ் என்பவர் பணி செய்து வந்த நிலையில், எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டு 20 அடி ஆழத்தில் கீழே விழுந்துள்ளார். இதனால் உடன் இருந்த சக பணியாளர்கள் சதீசை காப்பாற்ற ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் போது அவருடைய தலை மட்டும் தனியாக துண்டிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்ட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சதீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங், மேயர் இந்திராணி, காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் விபத்து தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பார்கள் என்றும் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேலாளர் பாலு, பணியிட பொறியாளர் சிக்கந்தர், பொக்லைன் ஓட்டுநர் சுரேஷ் குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளது.
இந்த நிலையில் மதுரையில் மண்சரிவு ஏற்பட்டு உயிரிழந்த தொழிலாளர் சதீஷ் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சமும், கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் இருந்து ரூ,5 லட்சமும் நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் சதீஷ் உயிரிழந்த தகவலை கேட்டு வேதனை அடைந்தேன் என்றும் சதீஷின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.