தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2022-ம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட, அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 20 பொருட்கள் மற்றும் முழு கரும்பு கொண்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில், இன்று முதல் நியாயவிலைக் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இதற்கு முன்னதாக அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதைத்தொடர்ந்து இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.

இதில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட, 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு, மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பினை இடைவிடாமல் தொடர்ந்து விநியோகம் செய்திட ஏதுவாக, நியாய விலைக் கடைகளுக்கான விடுமுறை தினம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.