தேர்ந்தெடுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்கள் 1000 பேருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் (new scheme).
பள்ளிக் கல்வித்துறை சார்பில் 250 அரசுப் பள்ளிகளுக்கு, அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம். (IITM) திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்னணு செய்முறை பெட்டகங்களை வழங்கினார்.
சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள டி.டி.ஜெகன்னாதன் அரங்கத்தில் நடைபெற்ற அனைவருக்கும் ஐஐடிஎம் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னணு செய்முறை பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்…
”எல்லோர்க்கும் எல்லாம் என்ற அடிப்படையில், அனைத்து மாணவர்களுக்கும் சமத்துவமான கல்வியை வழங்குவதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஐஐடி சென்னையில் பிஎஸ் தரவு அறிவியல் படிப்பதற்கு, தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 87 மாணவர்களில் 45 பேர் அரசு, மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்.
10ஆம் வகுப்புப் படிக்கும் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் என 1000 மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறிவுத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்படும் (new scheme).
குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஐஐடி உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு வழிகாட்டுதல் வழங்கப்படும்.
மேலும், அவர்கள் 12ஆம் வகுப்பை நிறைவு செய்த பின் அவர்கள் இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரிப் படிப்பைத் தொடரும்போதும் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் வசதிகள் கிடைக்க வேண்டும். கல்வி என்பது சமமாகக் கிடைத்தால்தான், அவர்களுக்கு அனைத்துமே சமமாகக் கிடைக்கும்.
எனவே, இந்தத் திட்டத்தை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவரும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.