பிரிட்டனில் ஒரே நாளில் 78,000க்கும் அதிகமானோர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருப்பது உலகம் முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. உலக நாடுகளில் கொரோனா தாக்கம் சற்று குறைவடைந்து வரும் நிலையில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் பல நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது.
இதற்கு முன்பு கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா, டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்களை விட ஒமைக்ரான் வைரஸ் அதிகம் பரவும் தன்மை கொண்டது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ள நிலையில், பிரிட்டனில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 78,000க்கும் அதிகமானோர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பிரிட்டனில் கொரோனா திரிபான ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனால் அடுத்த சில வாரங்களில் ஒமைக்ரானால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய சூழலில் ஒமைக்ரான் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது என்றும் இந்த புதிய வகை கொரோனா நிச்சயம் மோசமானதாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் இதனால் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.