தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு 2013-14ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த பத்தாண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களோ, பட்டதாரி ஆசிரியர்களோ நியமிக்கப்படவில்லை (Lakh Vacancies).
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் 8,643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் (Lakh Vacancies) காலியாக உள்ளது.
அவற்றில் 1,500 பணியிடங்களுக்கு மட்டும் புதிய இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்திருக்கிறது.
அரசு பள்ளிகளை மேம்படுத்த குறைந்தது ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டியுள்ள நிலையில், 1,500 ஆசிரியர்களை மட்டும் நியமிப்பது கண்டிக்கத்தக்கது;
இது அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு பதிலாக சீரழித்துவிடும். உண்மையில் அரசு பள்ளிகளுக்குத் தேவையான ஆசிரியர்களில் ஒரு விழுக்காட்டினரைக் கூட நியமிக்க தமிழக அரசு தயாராக இல்லை.
தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு 2013-14ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த பத்தாண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களோ, பட்டதாரி ஆசிரியர்களோ நியமிக்கப்படவில்லை.
இந்த காலத்தில் குறைந்தது 20,000 இடைநிலை ஆசிரியர்களும், 15,000 பட்டதாரி ஆசிரியர்களும் ஓய்வு பெற்றிருப்பர்.
ஆனால், இந்த விவரங்களை மறைத்து விட்டு 2023-24ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 8,643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே காலியாக இருப்பதாக அறிவித்தது.
இப்போது 1,500 ஆசிரியர்களை மட்டும் நியமிப்பது எந்த வகையில் நியாயம்? இது அரசு பள்ளிகளை எப்படி முன்னேற்றும்?
இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமல்ல, பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் பல்லாயிரக்கணக்கில் காலியாக உள்ளன.
ஆனால், கடந்த ஆண்டு நிலவரப்படி 3,587 பணியிடங்கள் மட்டுமே காலியாக இருப்பதாக அறிவித்த தமிழக அரசு, அந்த இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த ஆண்டே நிரப்பப்படும் என்றும் அறிவித்தது.
ஆனால், 2,222 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் இல்லாத நிலையே உருவாகும்.
இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பணிகளின் காலியிடங்கள் எல்லாம் அரசுத் தரப்பில் காட்டப்படும் கணக்கு தான். உண்மை நிலை முற்றிலும் மாறுபட்டது.
தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளை கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.
மற்றப் பள்ளிகளிலும் நிலைமை திருப்தியளிக்கும் வகையில் இல்லை. ஓராசிரியர் பள்ளிகள் தவிர, மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
கல்வியிலும், மனிதவளத்திலும் தமிழகம் சிறந்து விளங்குவதற்கு சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்பட்டது தான் காரணம்.
அரசு பள்ளிகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைத்துக் கொண்டு தரமான கல்வியை வழங்க முடியாது.
எனவே, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.