திருச்சி எடமலைப்பட்டி புதூர் கே.ஆர்.எஸ்.நகர் பகுதியில் 30 வயதாகும் மனோஜ்குமார் என்பர் அவரது மனைவி ஷோபனாவுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், இவர்களுக்கு தக்ஷிவன் (3), கபிக்ஷன் (11 மாதம்) என்ற 2 ஆண் குழந்தைகள் இருந்துள்ளனர்.
மனோஜ்குமாருக்கு பெற்றோர் இல்லாத நிலையில், சொந்தமாக பர்னிச்சர் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். அவரின் உறவினர்கள் தான், ஷோபனாவை பெண் பார்த்து மனோஜ்குமாருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கொரோனா ஊரடங்கு காரணமாக பர்னிச்சர் கடையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால், அவர் பர்னிச்சர் கடையை விட்டுவிட்டு மற்றொரு பர்னிச்சர் கடையில் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்துக்கு வேலைக்குச் செல்ல தொடங்கியுள்ளார்.
இதனால், மனோஜ்குமார் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர்களின் குடும்பத்தில் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் மனோஜ்குமார் வெளியூர் சென்றிருந்த போது வீட்டிலிருந்த ஷோபனா தனது இளைய மகனுடன், மனோஜ்குமாரின் உறவினர் ஒருவர் வீட்ட்டிற்குச் சென்று மனநிலை பாதிக்கப்பட்டவரை எனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டீர்களே? என்று கேட்டு, அழுது புலம்பியதாக கூறப்படுகிறது.
இதனால், ஷோபனா வாழ்க்கையில் விரக்தி அடைந்து நேற்று பகலில் தனது 2 குழந்தைகளையும் துப்பாட்டவால் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துவிட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று ஊருக்கு திரும்பிய மனோஜ்குமார் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உட்புறமாக பூட்டி இருந்ததுள்ளது. அவர் கதவை பல முறை தட்டியும் கதவை திறக்காததால் வீட்டின் உள் அறையில் ஏ.சி. போட்டு தூங்குவதால் சத்தம் கேட்காமல் மனைவி கதவை திறக்கவில்லை என்று நினைத்து, சென்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது.
பின்னர், மீண்டும் மாலையில் வந்து கதவை தட்டியபோதும் மனைவி கதவை திறக்கவில்லை. செல்போனில் அழைத்தும் ஷோபனா செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மனோஜ்குமார், பால்கனி வழியாக ஏறி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது மனைவி மற்றும் குழந்தைகள் 2 பேரும் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்ப பிரச்சினையில் 2 குழந்தைகளையும் கொலை செய்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.