மத அடிப்படைவாத கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இப்படி பேசியிருப்பது தமிழகத்தின் சட்ட ஒழுங்குக்கு விடப்பட்டுள்ள சவால் என்று பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலைக்கான கோப்பிற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை வரும் அக்டோபர் 28 அன்று நடைபெற்றது.
அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா,”முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை முன்விடுதலை செய்ய பரிந்துரைத்து தமிழ்நாடு அரசால் கடந்த ஆகஸ்ட் 24 அன்று ஆளுநருக்குக் கோப்பு அனுப்பப்பட்டது. இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் அக்கோப்பிற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.
மேலும் ஆளுநர் இந்த தீர்மானத்தில் கையெழுத்திட வேண்டும். இல்லையேல், ஆளுநர் மாளிகைக்குள் யாரும் உள்ளே போக முடியாமல் தடுக்க கூடிய ஆற்றல், திறமை, திராணி எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்து இருந்தார்.
இது குறித்து பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
கோவை குண்டுவெடிப்பில் 58 பேரை கொன்று குவித்த வழக்கின் தண்டனை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என நடத்தப்பட்ட முற்றுகை போராட்டத்தில் பேசிய மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா “ஆளுநர் இந்த தீர்மானத்தில் கையெழுத்திட வேண்டும். இல்லையேல், ஆளுநர் மாளிகைக்குள் யாரும் உள்ளே போக முடியாமல் தடுக்க கூடிய ஆற்றல், திறமை, திராணி எங்களுக்கு உள்ளது” என மிரட்டியுள்ளார்.
இதை தமிழக காவல்துறை சாதாரணமாக கடந்து போய் விடக்கூடாது. மத அடிப்படைவாத கட்சியின் தலைவர் இப்படி பேசியிருப்பது தமிழகத்தின் சட்ட ஒழுங்குக்கு விடப்பட்டுள்ள சவால். இதே தமிழக அரசு சில நாட்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றத்தில், “இந்த குற்றவாளிகளை விடுதலை செய்யக்கூடாது, அவர்கள் பயங்கரமானவர்கள், விடுதலை செய்யப்பட்டால் அவர்களால் சட்டம் ஒழுங்கு சீர்கேடும் என்று குறிப்பிட்டதை கேள்வி கேட்க கூடிய ஆற்றல், திறமை, திராணி ஏன் ஜவாஹிருல்லாவுக்கு இல்லை என்று விளக்குவாரா?
அறிவாலயத்தின் மீது அச்சமா? அல்லது பதவியின் மீதுள்ள மோகமா? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.