இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகை நயன்தாரா நடிக்க உள்ள புதிய படத்திற்கான டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து கலக்கி வருக்கிறார். இந்நிலையில், அண்மையில் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.
ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நயன்தாரா. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் ரூ.800 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், ஜவான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது தமிழில் தன்னுடையை முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் நயன்தாரா. நயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இறைவன்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 28-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இறைவன் படத்தை அஹமத் இயக்கிய உள்ளார். இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன் நடித்துள்ளார். மேலும், மோகன் ராஜா இயக்கும் ‘தனி ஒருவன் 2’, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ஒரு படம் என கைவசம் அடுத்தடுத்த படங்களையும் வைத்துள்ளார்.
அந்த வரிசையில், தற்போது பிரபல யூடியூபரான டியூடு விக்கி என்பவர் இயக்க இருக்கும் படத்தில் ஹீரொயினாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் நயன்தாரா. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது என்றும், இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்திற்கான டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ‘மண்ணாங்கட்டி’ என பெயரிடப்பட்டு உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளனர். மேலும் படத்தின் தலைப்பே வித்தியாசமாக உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.