அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்பட சில இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சி அளித்த நிலையில், அதனை சரி செய்யும் பணியில் தமிழக அரசு முழு வீச்சில் ஈடுபட்டது.
இந்நிலையில் அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.
நாளை சனிக்கிழமை (13-11-21 )
கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருநெல்வேலி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.
ஞாயிற்றுக்கிழமை (14-11-21) திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யும்.