குஜராத்தின் அமுல் நிறுவனம் தமிழகத்தில் பால்கொள்முதலை தொடங்க இருப்பதாக எழுந்துள்ள தகவல்களால் ஆவின் நிறுவனம் ஆட்டம் கண்டிருப்பதாக அதிர்ச்சி தெரிவிக்கிறார்கள் பால் முகவர்கள்.
தமிழகத்தில் அரசு நிறுவனமான ஆவின் தவிர்த்து, ஆரோக்யா, ஹெரிட்டேஜ், ஹட்சன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.
தனியார் நிறுவனங்கள் கூடுதல் விலை கொடுப்பதாலும், வாரம் தோறும் சரியாக நிலுவைத் தொகைகளை தந்து விடுவதாலும்
விவசாயிகள் பெரும்பாலும் தனியார் நிறுவனங்களுக்கே அதிக அளவில் பால் சப்ளை செய்வதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக நாளொன்றுக்கு 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்துவந்த ஆவினின் தற்போதை கொள்முதல் என்பது 30 லட்சம் லிட்டருக்கும் குறைந்துவிட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பால் விநியோகிக்கப்படுவதில்லை என்றும் ஆங்காங்கே புகார்கள் எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி பால் கொள்முதல் குறைவு காரணமாக, ஆவினில் பால் பொருட்களின் உற்பத்தியும் குறைந்துள்ளது என்கிறார்கள் பால்முகவர் கூட்டமைப்பினர்.
இதையும் படிங்க: நினைவிடங்கள் பராமரிப்பில் பாரபட்சம்; அதிமுகவை வம்புக்கு இழுக்கும் காங்கிரஸ்
இதனை நிவர்த்தி செய்வதற்காக, வெளி மாநிலங்களில் இருந்து பால் பொருட்களை இறக்குமதி செய்யும் சூழலும் நிலவிக் கொண்டிருக்கிறது.
இந்தக் கொள்முதலில், சந்தை விலையை விட அதிக விலைக்கு பொருட்களை வாங்கியதால் ஊழல் நடந்திருப்பதாகவும் சந்தேகம் தெரிவிக்கிறார்கள் அவர்கள்.
இப்படி சர்ச்சைகளிலும், சிக்கலிலும் இருக்கும் ஆவினுக்குப் பேரிடியாக இறங்கியிருக்கிறது குஜராத்தைச் சேர்ந்த அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்ய இருப்பதாக வெளியாகி உள்ள தகவல்கள்.
ஏற்கனவே கடந்த ஆண்டு கிருஷ்ணகிரியில், அமுல் நிறுவனம் சார்பில் பால் பண்ணை கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளும் தொடங்கியது.
அதன் வழியாக அமுல் நிறுவனத்தின் தயிர், பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்கள், முகவர்கள் வழியாக தமிழகத்தில் கடை விரிக்கப்பட்டன.
அதே போல், ஒருசில பகுதிகளில் பால் கொள்முதலும் தொடங்கப்பட்டது.
இதனால் ஆவினின் பால்கொள்முதல் முடக்கப்படும் சூழல் ஏற்படும் என்று அப்போது பரபரப்பு கிளம்பியது.
இதையடுத்து மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சரான அமித்ஷாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில், தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில்
அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கூறியிருந்தார்.
முதலமைச்சரின் கடிதம் வெளியான அன்றே, ஆவின் நிறுவனத்துடன் நாங்கள் போட்டியிடவில்லை என்று அமுல் நிறுவனம் பதில் கூறியது.
ஆவின் நிறுவனம் நிர்ணயித்துள்ள விலையிலேயே கொள்முதல் செய்வதாகவும்,
ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் நபர்கள், அமுல் நிறுவனத்திற்கு மாற வேண்டும் என்றால் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்றும் தெரிவித்தது.
இதன்பின்னர் அடங்கிப் போயிருந்த இந்தப் பிரச்சனை தற்போது, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பால் விற்பனையை துவங்குவதற்கு அமுல் நிறுவனம் மீண்டும் மும்முரம் காட்ட துவங்கியிருப்பதாக பால் முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்காக செங்குன்றம் அருகே கிடங்கு அமைத்திருப்பதாகவும்,
முதற்கட்டமாக ஆவினுக்கு போட்டியாக தயிர், பனீர், யோகர்ட், லஸ்ஸி விற்பனையை அமுல் நிறுவனம், ‘டீலர்’கள் வாயிலாக துவங்கியுள்ளதாகக் கூறுகிறார்கள் அவர்கள்.
இன்னும் இரண்டு மாதங்களில் ஆந்திராவின் சித்துார் பால் பண்ணையில் இருந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்,
பால் விற்பனையை தொடங்க அமுல் முடிவெடுத்துள்ளது என்கிறார்கள் பால் முகவர் அமைப்பினர்.
சென்னையில் நாள்தோறும் 14.5 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனையாகும் நிலையில், அமுல் வரவால் ஆவின் விற்பனை முடங்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை தெரிவிக்கிறார்கள்.
அதே நேரம் ஆவின் நிறுவனம் செயல்படுவதுதான் தனியார் பால் நிறுவனங்களும் கடிவாளம் போடும். ஆவின் நிறுவனம் மூடப்பட்டால் தனியார் வைத்ததுதான் சட்டமாகும்;
அவர்கள் கொடுப்பதுதான் விலை என்ற நிலை ஏற்படும் என்றும் உள்ளதைச் சொல்கிறார்கள் பால் உற்பத்தியாளர்கள்.
அமுல் மட்டுமல்ல, யார் வந்தாலும் ஆவினை முடக்க முடியாது என்பதை அரசு தனது செயல்பாட்டின் மூலம் நிரூபிக்க வேண்டும்.
இதையும் படிங்க: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!