பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய், நியாய விலைக்கடைகளில் சலுகை விலையில் தேங்காய் வழங்க வலியுறுத்தி பாஜக விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் 1000 ரூபாய் ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
இந்த நிலையில் தொடக்கத்தில் இருந்தே பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்புடன், தேங்காய், சலுகை விலையில் தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களையும் சேர்த்து வழங்க வேண்டும் பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் பரிசுத்தொகுப்பில் தேங்காய் வழங்க வலியுறுத்தியும், நியாய விலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய்யை சலுகை விலையில் வழங்க வேண்டும்,
பள்ளிகளில் தேங்காய் எண்ணெய் மூலம் சமைத்த உணவுகளை கொடுத்திட வேண்டும், தென்னை விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், தமிழகம் முழுவதும் விவசயிகளிடமிருந்து தேங்காய்களை கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவினர் முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் தேங்காயிலும் உள்ளதால் மாணவ மாணவிகளுக்கு தேங்காப்பால் வழங்க வேண்டும் எனவும், ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட தேங்காயை தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக விவசாய அணி மாநிலத்தலைவர் நாகராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு தேங்காய், வழங்க வலியுறுத்தியும் என முதல்வருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
பாஜகவினரின் ஆர்ப்பாட்டத்தையொட்டி காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.