கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட ப்ளட் ஆர்ட், மீண்டும் தலைதூக்கி இருப்பது, ரீல்ஸ் வீடியோவாக வெளியாகி பரபரப்பு பட்டாசை பற்ற வைத்திருக்கிறது.

காதல்… அது இளைஞர்களுக்குள்ளும், யுவதிகளுக்குள்ளும் புரியும் வேதிவினைகளை எதனாலும் சொல்லிவிட முடியாது.
காதல் வயப்பட்டதை வேண்டுமானால் பல்வேறு விதங்களில் வெளிக்காட்டலாம். அதில் சமீபத்தில் டிரெண்டானதுதான் ப்ளட் ஆர்ட் எனப்படும், ரத்த ஓவியம்.
காதலனோ, காதலியோ தங்களது ரத்தத்தை கொடுத்து மற்றவர்களின் ஓவியங்களை ரத்தத்தில் வரைந்து கிப்ட் கொடுப்பதுதான் அது.
கடந்த 2016லேயே தனது ரத்தத்தில், 200க்கும் மேற்பட்ட தேசத் தலைவர்கள், பல்வேறு பிரபலங்களின் ஓவியங்களை வரைந்து அதற்காக இந்தியச் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்திருக்கிறார் கர்நாடகாவைச் சேர்ந்த சங்கமேஷ் பாகலி.

ஆனால், இந்த காதல் பரிசு விவகாரத்தில் பலரும், அபாயங்களை அறியாமல் ரத்தத்தை கொடுத்து ஓவியங்களை வாங்கியதாக பரபரப்பு கிளம்பியது.
அதாவது சுகாதாரமற்ற சூழல், ஒரே ஊசியைப் பயன்படுத்துவது என்று உயிருக்கே ஆபத்தான விபரீத ரத்த ஓவியக் கலையை தடுக்குமாறு பல்வேறு தரப்பிரும் கோரிக்கை எழுப்பினர்.
இதனிடையே சென்னையில் தி.நகர், வடபழனி போன்ற முக்கியமான இடங்களில் இந்த ப்ளட் ஆர்ட் வியாபாரம் சூடு பிடிக்கவே அரசின் கவனத்துக்கு இது சென்றது.

உடனடியாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரைவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
தி.நகர், வடபழனியில் பிளட் ஆர்ட் நடத்தி வந்தவர்களிடமிருந்து அவர்கள் பயன்படுத்திய ஊசி மற்றும் ஓவியங்களைக் கைப்பற்றி எச்சரித்து இருக்கிறோம்.
இனி ரத்தத்தை எடுத்து ஓவியம் வரைவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
விலைமதிப்பில்லாத ரத்தத்தை இதுபோல வீணாக்க வேண்டாம். பதிலாக, உயிர் காக்கும் ரத்தத்தை தானம் செய்யுங்கள்” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இதற்குப் பிறகு இந்த ப்ளட் ஆர்ட் தொடர்பான தகவல்கள் இல்லாத நிலையில், திருச்சியில் செயல்படும் நிறுவனம் ஒன்று பிளட் ஆர்ட் ஓவியம் வரைந்து தருவதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளது.

ஒரு பெண்ணின் கையில் இருந்து எடுக்கப்படும் சிறிதளவு ரத்தத்தைக் கொண்டு அவருக்கு விருப்பமான ஒரு ஆணின் புகைப்படத்தை வரைந்து கொடுப்பதாக அந்த ரீல்ஸ் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
இதே போன்று ப்ளட் ஆர்ட் தேவைக்கு தங்களைத் தொடர்பு கொள்ளவும் அந்த வீடியோவில் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், இது நெட்டிசன்களிடையே விவாதப் பொருளாக மாறி உள்ளது.
அரசு தடைவிதித்த ஒரு செயலை மீண்டும் செய்ய நினைப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து பரவி வருகிறது.