தமிழகத்தில் மூன்றாண்டு திமுக ஆட்சியில் மக்கள் ஏராளமான சிரமங்களைப் பெற்று தவிப்பதாக த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழ்மாநில காங்கிரஸ் துணைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான மாறன் என்ற வேணுகோபால் உருவப்படம் திறப்பு விழா சென்னையில் நடந்தது.
ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், உருவப்படத்தினை ஜி.கே.வாசன் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடின உழைப்பு, விசுவாசத்துக்கு எடுத்துக்காட்டானவர் மாறன். உடல்நலக்குறைவாக இருந்தபோதும் இயக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்று வலுசேர்த்தவர்.
அரசியலில் மூப்பனாருக்கு பிரச்சனை ஏற்பட்ட போதெல்லாம் முதல் வரிசையில் உடன் இருந்தவர் என்று புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவரும் நெல்லைப் பாதுகாக்க வேண்டும். வானிலை மைய எச்சரிக்கையை முறையாக கவனித்து நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும்.
கோடைகாலத்தில் உடனடியாக ஏரி குளங்களை தூர்வார நிதி ஒதுக்க வேண்டும். ஏரிகள் புனரமைப்பு பணியையும் சரியாக செய்ய வேண்டும். பட்டாசு ஆலைகள் விபத்தை தடுக்க அரசு உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் மர்ம மரணம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது. காவல் துறை உண்மை நிலையை உடனே வெளி கொண்டு வர வேண்டும் .
கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்கள் பெற்ற சிரமங்கள் ஏராளம். சொத்து தண்ணீர் பால் விலை உயர்வு ஏற்படுத்தி அதனை குறைக்க முடியாத அரசாக மக்கள் மீது சுமையை ஏற்றிய அரசாக திமுக உள்ளது.
முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு, மக்களின் தேவைகளை மொத்தத்தில் பூர்த்தி செய்யாத அரசாக உள்ளது.
சட்டம் ஒழுங்கை பற்றி கவலை இல்லாத அரசாக உள்ளது.
இதையும் படிங்க: பரிதாபம் காட்டுறவங்களா நீங்க… இந்த மூதாட்டி கதி உங்களுக்கு வேண்டாமே!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு வழங்கப்பட்ட பத்ம விருது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமையாக தமிழ் மாநில காங்கிரஸ் கருதுகிறது.
நடக்கும் பாராளுமன்றத் தேர்தலில் அடுத்த வாரம் மும்பை தமிழக பகுதிகளிலும் அதற்கு அடுத்த வாரம் டெல்லி தமிழக பகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய உள்ளேன்.
தூத்துக்குடியில் பலருக்கு வேறு நீட் தேர்வு வினாத்தாள் வழங்கியது குறித்த கேள்விக்கு, தேர்வை முறையாக சரியாக நடத்துவது தேர்வை நடத்தும் குழுவின் கடமை.
அதை அவர்கள் சரியாக செய்து தவறினால், உள்நோக்கம் என்ன? தவறு எங்கே நடந்தது என்பதை குறிப்பிட்ட காலத்திற்குள் சரிப்படுத்த வேண்டும். ‘தவறு செய்தவர்கள் அதிகபட்ச தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
பிரதமர் மோடி மதவாத அரசியல் பேசுவதாக காங்கிரஸ் கட்சி கூறும் கருத்தை தமிழ் மாநில காங்கிரஸ் ஏற்கவில்லை. மத்திய பாஜக அரசு மத நல்லிணக்க அரசாகவே செயல்பட்டு வருகிறது.
ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு பொருளாதாரத்தை, நாட்டை உயர்த்திருக்கிறார் பிரதமர்.
திமுகவில் ஒரு இஸ்லாமியருக்கு கூட தமிழகத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.