பெண்களை தாக்கியும் மிரட்டியும் திமுக நிர்வாகிகள் போட்டுள்ள அராஜக ஆட்டம் தமிழக மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஆயந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ்காந்தி. கடந்த 2 ஆண்டுக்கு முன்பு குடிபோதையில் வாகனத்தை வேகமாக இயக்கியதால், பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு சர்ச்சைக்கு உள்ளான இவர் மீண்டும் தனது அடாவடியை காட்டியிருக்கிறார்.
இவருக்கும், கிராம நிர்வாக அலுவலர் சாந்தி என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில் தேர்தல் முடிந்த அன்று வாக்குச்சாவடி ஊழியர்களுக்காக உணவு வாங்கி வந்த சாந்தி, அதே உணவகத்தில் ராஜீவ்காந்தி ஆர்டர் செய்த உணவுப் பொட்டலத்தை மாற்றி எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் வாக்குச்சாவடி மையத்தில் வைத்து வி.ஏ.ஓ.சாந்தியை, ராஜீவ்காந்தி தாக்கி வயிற்றில் எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சாந்தி கொடுத்த புகாரின் பேரில் திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ்காந்தி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
இதே போல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரமன்ற தலைவரும், திமுக நகர செயலாளருமான கருணாநிதி, நகராட்சி ஆணையர் கமலாவை மிரட்டியதாக கூறப்படுகிறது.
கோவில்பட்டி பஸ்நிலையம் அருகே நகராட்சி கட்டணக் கழிப்பறை முன்பகுதியில் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் செல்லும் பாதையை ஆக்கிரமித்து கடை திறக்கப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் இந்த கடையை அகற்ற நகராட்சி ஆணையர் கமலாவிடம் கோரிக்கை வைத்தனர்.
தேர்தல் நடத்தை நெறிமுறையால் தற்போது அகற்ற முடியாது என்று கமலா தெரிவித்துள்ளார்.
இதனால் நகராட்சி அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நகராட்சி தலைவர் கருணாநிதியும், ஆக்கிரமிப்பு செய்து கடை அமைத்துள்ளவர்களும், நகராட்சி ஆணையர் அலுவலகத்துகுள் சென்றுள்ளனர்.
பின்னர் ஆணையர் கமலாவிடம், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை, பணிக்கு இடையூறு செய்வதாகக் கூறி போலீசில் புகார் கொடுக்க வேண்டும் ஆவேசமாக மிரட்டி உள்ளார்.
அதே போல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் நீங்கள்தான் ஊரை காப்பாற்றப் போகிறீர்களா? என்று மிரட்டும் தொணியில் பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
3ஆண்டுகால ஆட்சியில் பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, மக்கள் மத்தியில் திமுக மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இப்போது திமுக நிர்வாகிகளின் செயல், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக உள்ளதால், திமுக மேலிடம் கடுப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அரசு பள்ளியில் செறிவூட்டல் அரிசி.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!!