அரசு ஒப்பந்த செவிலியர் ஒருவர் மருத்துவரின் பலான டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சக செவிலியர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
வீடு தொடங்கி பள்ளி,கல்லூரி, அலுவலகம் என எல்லா இடங்களிலும் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் என்பது கட்டுக்கடங்காமல் செல்வதாக, ஆய்வறிக்கைகள் அதிர்ச்சி தெரிவிக்கின்றன.
பாதுகாவலாக இருக்க வேண்டிய காவல்துறையிலேயே சிலர், பெண்களை போகப் பொருளாக்கி அத்துமீறும் அசம்பாவிதங்களும் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும், பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை முடிவுக்கு கொண்டுவர அரசு கடுமையான சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே பெண்ணியவாதிகளின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
அதே நேரம் தங்களின் எதிர்காலம், குடும்பத்தின் எதிர்காலத்தைக் கருதி இந்த பாலியல் சீண்டல்களை வேண்டா வெறுப்புடன் சகித்துக் கொள்ளும் நிலையும் இங்கே பெண்களிடம் நிலவிக் கொண்டுதான் இருக்கிறது.
அல்லது பாலியல் டார்ச்சர்களுக்கு எதிராக உயிரை மாய்க்கும் முயற்சிகளில் ஈடுபடும் சோகமும் அரங்கேறி கொண்டிருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் மருத்துவர் ஒருவரின் பாலியல் டார்ச்சர் காரணமாக, செவிலியர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள் முனைந்திருப்பது அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது.
வத்தலக்குண்டு அருகே உள்ள விராலிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சீனிவாசன் மீதுதான் பாலியல் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஜி.தும்மலப்பட்டி ஊராட்சியில், இல்லம் தேடி மருத்துவம் பிரிவில் தற்காலிகப் பணியாளராக பணியாற்றும் பெண் செவிலியர் ஒருவருக்கு சீனிவாசன் பாலியல் டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது.
தனது விருப்பத்துக்கு ஒத்துழைக்காவிட்டால், பணியில் இருந்து நீக்கி விடுவதாகவு சீனிவாசன் மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அந்த செவிலியர், தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து அவரை மீட்டவர்கள் ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அந்த செவிலியரின் புகாரின் அடிப்படையில் வத்தலக்குண்டு போலீசார் மருத்துவர் சீனிவாசனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சீனிவாசன் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்ததால், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.