தென்காசியில் திமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சித் தலைவியின் கணவர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதைதொடர்ந்து, திமுக என்பது போதை கடத்தல் ஆசாமிகள் தஞ்சமடைந்துள்ள இடமா? என்று தமிழக அரசியல் அரங்கில் கேள்வி எழுந்துள்ளது.
திமுகவின் அயலக அணியின் மாவட்ட நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக், சமீபத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தலில் தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்டார்.
அவருடன் நெருக்கத்தில் இருந்த இயக்குநர் அமீரும் விசாரணை வளையத்துக்குள் இருந்து வருகிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட திமுக பிரபலங்களுடன் ஜாபர் சாதிக் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் வெளியானது.
இதனைத் தொடர்ந்து போதைக் கடத்தல் குற்றவாளிகளின் கேந்திரமா திமுக என்றெல்லாம் அரசியல் அரங்கில் கேள்வி எழுந்தது.
இந்த விவகாரம் இன்னும் நீருபூத்த நெருப்பாக இருந்துவரும் நிலையில், இன்னொரு திமுக பிரமுகரின் உறவினரும் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருளைக் கடத்தியதாக கைது செய்யப்பட்டிருப்பது திமுக மீதான புகார் பட்டியலை அதிகரித்திருக்கிறது.
இப்போது கைது செய்யப்பட்டிருப்பவர் தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள வி.ரெட்டியார்பட்டி கிராமத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் ஆவார்.
திமுகவை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ், ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.
இவரது மனைவி தமிழ் செல்வி தென்காசி மாவட்ட திமுக பஞ்சாயத்து தலைவியாவார்.
சிவகிரி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த சிறப்புப் பிரிவு போலீசார், அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டபோது அதில் 440கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதை கண்டறிந்தனர்.
இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட மாவட்ட பஞ்சாயத்து தலைவி செல்வியின் கணவரும், திமுக ஒன்றிய கவுன்சிலருமான சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் ஓட்டுநர் லாசர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.
சுபாஷ் சந்திரபோஸ் மீது ஏற்கனவே, திருப்பூர், விழுப்புரம், கயத்தாறு காவல்நிலையங்களில் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக கைதான சுபாஷ் சந்திர போஸை, திமுகவில் இருந்து நீக்கியிருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகனும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஆனால் போதைப் பொருள் கடத்தலில் தொடர்ந்து திமுகவினர் சிக்குவது, திமுகமீதும் தலைமை மீதும் பல்வேறு கேள்விகளை அரசியல்களத்தில் எழுப்பி இருக்கிறது.
எதிர்க்கட்சியாக இருந்தபோது குட்கா நடமாட்டம் அதிகம் இருப்பதாக சட்டப்பேரவையில் குட்கா எடுத்துச் சென்று காட்டிய ஸ்டாலினின் தற்போதைய ஆட்சியில் ஏன் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஒழிக்க முடியவில்லை என்றும் கேள்வி எழுந்துள்ளது.
அதே நேரம் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து தொடர்பில் இருப்பது அம்பலமாகி வருகிறது.
முதல்வர் ஸ்டாலினும், திமுக மூத்த நிர்வாகிகளும் போதை கடத்தல் விவகராத்தில் கடுமயான நடவடிக்கை எடுத்துவருகின்றனர். ஆனாலும் ஒரு சில புல்லுருவிகள் கட்சிக்கு கெட்டபெயர் ஏற்படுத்தி வருவதாகவும், அது கட்சி தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி இருப்பதாகவே அங்கலாய்க்கிறார்கள் திமுகவின் உண்மை விசுவாசிகள்.