ஈரோட்டில் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் தளவாடியை அடுத்த தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயது கூலித் தொழிலாளி ரமேஷ்.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆஷா என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கும் முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆஷா மீண்டும் 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
மதுப்பழக்கத்துக்கு அடிமையான ரமேஷ், அவ்வப்போது மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த ரமேஷ், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறவே, மனைவி கர்ப்பிணி என்பதையும் கண்டுகொள்ளாமல் அவரைத் தாக்கி விட்டு வெளியேறி உள்ளார்.
இதையும் படிங்க: இபாஸ் உத்தரவை மறுபரிசீலனை செய்திடுக – ஜவாஹிருல்லா
வெகு நேரம் ஆகியும் ஆஷா வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் கதவைத் திறந்து பார்த்துள்ளனர்.
அங்கே அவர் சுய நினைவின்றி தரையில் கிடந்துள்ளார்.
பதறிப் போன உறவினர்கள் ஆஷாவை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஆஷாவும், வயிற்றில் இருந்த சிசுவும் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தகவலின் பேரில் அங்கு வந்த தாளவாடி போலீசார், ஆஷாவின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுகாக தாளவாடி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
இதனால் கோபமடைந்த ஆஷாவின் உறவினர்கள் ஆஷாவின் இறப்பிற்கு நீதி கேட்டுத் தாளவாடி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவரை கைது செய்தால் மட்டுமே, ஆஷாவின் உடலைப் பெற்றுக் கொள்வோம் என்றும் அவர்கள் உறுதியுடன் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் ரமேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து
உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் தலைமறைவான ரமேஷை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தேவகவுடாவின் பேரன் கட்சியில் இருந்து இடை நீக்கம் – செயற்குழு கூட்டத்தில் முடிவு