கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை 2 நாட்களும் மற்றொரு வழக்கில் யூடியூப் தலைமை ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாளும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றங்கள் அனுமதி அளித்துள்ளது.
யூடியூப் சேனல், பேட்டி ஒன்றில் பெண் போலீஸாரை அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கர் மீது முசிறி டிஎஸ்பி யாஸ்மின், திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார்.
அந்தபுகாரின் பேரில், சங்கர் மீதும், அவரை பேட்டி எடுத்து ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் சேனல் தலைமை ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து டெல்லியில் தலைமறைவாக இருந்த பெலிக்ஸை திருச்சி தனிப்படை போலீஸார் மே 13-ம் தேதி கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்தனர்.
அவரை சைபர் க்ரைம் பிரிவில் ஒப்படைத்தபின்னர், திருச்சி மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெயபிரதா முன்னிலை ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையும் படிங்க: தேர்தல் முடிவைப் பொறுத்துதான் EPS தலைமை தொடரும்!- சொல்வது KCP
அப்போது, மே 27-ம் தேதி வரை பெலிக்ஸை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் திருச்சி, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில், பெலிக்ஸ் ஜெரால்டு தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நீதிபதி ஜெயபிரதா முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது, பெலிக்ஸ் ஜெரால்டுவை போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதிக்க கோரி திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதற்கு பெலிக்ஸ் ஜெரால்டு தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், இரு தரப்பு வழக்கறிஞர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.
அதன்படி, இன்று (மே20) மாலை 3 மணி முதல் அவரை காவலில் எடுத்து விசாரித்து வரும் போலீஸார் விசாரணைக்கு பிறகு நாளை மாலை 3 மணிக்கு அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துகின்றனர்.
முன்னதாக, போலீஸ் விசாரணைக்கு செல்வதையொட்டி பெலிக்ஸுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: பாலைவனமாகும் அமராவதி ஆற்றுப்படுகை ; சுயநல திமுக அரசு- ஆவேச டிடிவி தினகரன்!
இதே போல, கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் போலீசார் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில், சவுக்கு மீடியா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கரை கோவை போலீஸார் மே 5-ம் தேதி, தேனியில் வைத்து கைது செய்தனர்.
அப்போது, அவரது காரில், கஞ்சா இருந்ததை பழனிசெட்டிபட்டி போலீஸார் காரில் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, சங்கரையும், அவருடன் தேனி விடுதியில் தங்கியிருந்த ராஜரத்தினம், மற்றும் ஓட்டுநர் ராம்பிரபு ஆகியோரையும் பழனிசெட்டிபட்டி போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில் கோவை சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர், கஞ்சா வழக்குக்காக மதுரை போதை பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை 7 நாள் போலீஸில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போதைப் பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு இன்று (மே 20) விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கரை பெண் போலீஸார் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர்.
இதையும் படிங்க: போதைப் பொருள் பயன்படுத்தினார்களா விஜய், திரிஷா? – புதிய சர்ச்சை
பின்னர், சவுக்கு சங்கரை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கலாம்.
விசாரணை முடிந்து, புதன்கிழமை மாலை 3 மணிக்கு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.
போலீஸ் விசாரணையின் போது சவுக்கு சங்கரை காலை 8, மதியம் 2, இரவு 7 மணிக்கு வழக்கறிஞர் சந்தித்து பேசலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, சவுக்கு சங்கரை, பழனிசெட்டிப்பட்டி போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணைக்கு அழைத்து செல்வதற்கு முன்பாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு வழக்கமான மருத்துவபரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மே 22-க்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.