நெல்லையில், சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வாங்கிவந்த முறுக்கினுள் விஷ ஜந்துவான பூரான் கிடந்ததால், ஸ்வீட் கடை மீது நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் உடையார்பட்டி, யூ.வி.நகரைச் சேர்ந்தவர் குருமகாராஜான். இவர் கடந்த 25ஆம் தேதி மாலை தனது மகனுடன் உடையார்பட்டி பகுதியில் டீ குடிக்க சென்றுள்ளார். இங்குள்ள ராம், முத்துராம் தியேட்டர் அருகில் இருக்கும் விசாகா பவண் வெஜ் ஓட்டலில் டீ குடித்துள்ளனர். பின்னர் இதன் சார்பு நிறுவனமான பிரிமியம் ஸ்வீட்ஸ் தொண்டர் சன்னதி அல்வா கடையில் கால்கிலோ அல்வா 2பாக்கெட், துக்கடா கால்கிலோ, 50 ரூபாய்க்கு முறுக்கு வாங்கியுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்து பார்சலை பிரித்துப் பார்த்தபோது முறுக்கினுள் இறந்த நிலையில் விஷ ஜந்துவான பூரான் கிடந்துள்ளது.
இதுகுறித்து கடையில் கேட்டபோது அவர்கள் சரியான முறையில் பதில் அளிக்காததால், குரு மகாராஜன், உணவு பாதுகாப்புத்துறை தலைமை ஆய்வாளருக்கு புகார் மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில், முறுக்கு பாக்கெட்டில் பூரான் கிடந்ததைத் தெரிவித்துள்ளார்.
மேலும் முறுக்குடன் பூரானையும் கவனிக்காமல் சாப்பிட்டு இருந்தால் குடும்பத்தினர் நிலைமை கவலைக்கிடமாகி இருக்க வாய்ப்புள்ளது.
நிர்வாகத்தின் கவனக்குறைவால் பூரான் கிடந்ததால், கடை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
குருமகாராஜனின் இந்த புகார் மனுவும், பூரான் கிடந்த முறுக்கும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.