பொதுமக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் போலீசுக்கு போகலாம். போலீஸுக்கே பிரச்சனை என்றால் எங்கே செல்வார்கள்? என்று கேட்பது போல பெண் காவல் ஆய்வாளர் வீட்டிலேயே மர்மநபர்கள் கைவரிசையை காட்டி இருக்கிறார்கள்.
மதுரை அருகே நடந்துள்ள இந்த பகீர் கொள்ளைச் சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பாசிங்காபுரம், மீனாட்சிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா (வயது 42). இவரது கணவர் உதயகண்ணன், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். ஷர்மிளா, தற்போது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சப்டிவிஷனுக்கு உள்பட்ட விளாம்பட்டி காவல்நிலையத்தில் ஆய்வாளராகப் பணி செய்து வருகிறார்.
ஷர்மிளாவின் வீட்டில் கட்டுமான வேலை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை இரவு ஆய்வாளர் ஷர்மிளா தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. மேலும் அதில் வைக்கப்பட்டிருந்த 250 சவரன் நகை, 5லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து கொள்ளைச் சம்பவம் குறித்து அலங்காநல்லூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் 2 தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
காவல் ஆய்வாளரின் வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையர்களைப் பிடிக்கும் போலீஸ் வீட்டிலேயே கொள்ளையா? என்றும் அந்தப் பகுதியில் உள்ளவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதையும் படிங்க: கலைஞருக்கும்,அ.தி.முகவிலிருந்து தி.மு.கவில் வந்துசேர்ந்த.. – வைரமுத்து ட்வீட் வைரல்!