முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை பராமரிக்கும் தமிழக அரசு காமராஜரின் நினைவிடத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?
காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை எழுப்பியுள்ள கேள்வி அரசியல் அரங்கில் புகைச்சலை கிளப்பி உள்ளது.
சென்னை கிண்டியில் காந்தி மண்டப வளாகத்தில் பெருந்தலைவர் காமராஜர் நினைவிடம் உள்பட பலரது நினைவிடங்கள் அமைந்துள்ளன.
இந்த நிலையில் காமராஜர் நினைவிடம் சரியாகப் பராமரிக்கப்படவில்லை, மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை என்று பல்வேறு தரப்பினரும் புகார் கூறி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காமராஜர் நினைவாலயம் பராமரிக்கப்படாதது குறித்த புகார்கள் தொடர்பாக பத்திரிகை வாயிலாக தகவல் சொல்லியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இடுகாடு போல வைத்திருக்கிறார்கள் என்றார்.
இப்போதிருக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் காமராஜர் காலத்தில் பணியாற்ற வாய்ப்பில்லை. அவர்கள் அம்மையார் ஜெயலலிதா, முன்னாள் முதலமைச்சர்கள் ஆட்சியில் பணியாற்றி இருப்பார்கள்.
அவர்களுக்கு ஏன் காமராஜர் அருமை தெரியவில்லை? அவருடைய பெருமையைப் ஏன் புரிந்து கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தையும், இதனையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
நம்முடைய ஆட்சி வந்து 3 ஆண்டுகள் ஆகியும் ஏன் அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு செய்யவில்லை.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு @SPK_TNCC செய்தியாளர்கள் சந்திப்பு.
முன்னாள் முதலமைச்சர்களின் நினைவாலயங்களுக்கு ஒரு அளவுகோல்,
காமராஜரின் நினைவாலயத்துக்கு ஒரு அளவு கோல் என்றால் எப்படி அதனை ஏற்றுக் கொள்ள முடியும்? என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
பொதுப்பணித்துறை அமைச்சரிடம் இதுகுறித்து தெரிவித்திருப்பதாகவும், அவர் செய்யவில்லை என்றால் முதலமைச்சரை அணுகி கோரிக்கை வைப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், கடற்கரையில் கருணாநிதி நினைவிடம் இருப்பதை ஏன் குறிப்பிடவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பெருந்தலைவர் காமராஜர் அப்பழுக்கற்ற ஆட்சி செய்தவர், எந்தவித தண்டனையும் பெறாதவர். எந்தக் குற்றச்சாட்டும் இல்லாத முதலமைச்சர் என்று கூறியவர் அரசியல் நாகரிகம் எங்களுக்குத் தெரியும் என்றபடி நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்.
அதாவது சிறைத்தண்டனை பெற்றவர் ஜெயலலிதா என்பதால், அவரது நினைவிடத்தையே தொடர்புபடுத்தி செல்வப்பெருந்தகை கூறியது தற்போது அதிமுகவுக்குள் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் இது தொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ளார்.
அதில், பெருந்தலைவர் காமராஜர் பற்றி உங்க கூட்டணி கட்சி தலைவர் கருணாநிதி கேவலமாக பேசிய வரலாறு தெரியுமா? என்று கேள்வி எழுப்பியவர்,
புரட்சித் தலைவி அம்மா நினைவிடம் போல் இருக்க வேண்டும் என்றால் எங்கள் எடப்பாடியாரை அணுகலாமே என்றும் கூறியுள்ளார்.
அதுசரி எரிந்து செத்த கட்சிகாரனுக்கே கண்டனம் தெரிவித்து நியாயம் கேட்க தெரியல என்றும் கோவை சத்யன் பதிவிட்டுள்ளார்.
செத்த கட்சிகாரனுக்கே கண்டனம் தெரிவித்து நியாயம் கேட்க தெரியல.
தற்போது ஆட்சியில் இருக்கும் கூட்டணிக் கட்சியான திமுகவிடம், ஏன் காமராஜர் நினைவிடத்தை பராமரிக்கவில்லை என்று கேள்விகேட்க தைரியமில்லாமல்,
இப்படி எங்கள் கட்சி தலைவி குறித்து விமர்சிக்கும் வகையில் செல்வப்பெருந்தகை பேசுவது ஏன் என்றும் அதிமுகவினர் பலரும் ஆவேசமாக கேள்வி கேட்கத் தொடங்கி உள்ளனர்.