சிக்கன் ரைசில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொலை செய்ததாக பேரனை போலீசர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தில் வசித்து வந்தவர் 72 வயது சண்முகநாதன்.
இவரது மகள் நதியா வயிற்றுப் பேரன் பகவதி. இவர் பொறியியல் கல்லூரி மாணவராவார்.
கொசவம்பட்டியில் வசித்து வரும் பகவதி, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஹோட்டலில் சாப்பிடச் சென்றுள்ளார்.
ஜீவானந்தம் என்பவர் நடத்தி வரும் ஹோட்டலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர், வீட்டுக்கு கொண்டு செல்ல 7 சிக்கன் ரைஸ்களை பார்சல் வாங்கிச் சென்றிருக்கிறார்.
வீட்டுக்கு வந்ததும் பார்சலில் ஒன்றை தனது தம்பி ஆதி மூலம், தாத்தா சண்முக நாதனுக்கு கொடுத்தனுப்பி இருக்கிறார்.
இந்த நிலையில் சிக்கன்ரைஸை சாப்பிட்ட பகவதியின் தாயார் நதியா அதில் வித்தியாசமான வாசம் வந்ததால் சாப்பிடாமல் வைத்துவிட்டார்.
உடனடியாக தனது தந்தை சண்முகநாதனுக்கு போன் செய்து சிக்கன் ரைஸை சாப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார்.
ஆனால், அவரோ அதற்குள் சிக்கன் ரைஸை சாப்பிட்டு உள்ளார்.
இந்த நிலையில் சிறிது நேரத்தில் நதியாவுக்கும், சண்முகநாதனுக்கும் உடல் உபாதைகள் ஏற்படவே, இருவரையும் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இதனிடையே சிக்கன் ரைஸால் தனது தாயார் மற்றும் தந்தை உடல்நிலை பாதித்ததாகக் கூறி பகவதி போலீசார் புகார் அளித்துள்ளார்.
நாமக்கல் போலீசார் உணவக உரிமையாளர் ஜீவானந்தத்திடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் தகவலின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகத்தில் ஆய்வு நடத்தி சுகாதாரமற்ற நிலையில் இருந்த உணவகத்துக்கு சீலும் வைத்தனர்.
ஆனாலும் அதே நாளில் 70க்கும் அதிகமான சிக்கன்ரைஸ் விற்பனையான நிலையில் மற்றவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை;
இதனால் சண்முகநாதன் மற்றும் நதியா சாப்பிட்ட சிக்கன்ரைஸை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாத்தா சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் ஆய்வில், சிக்கன் ரைஸில் பூச்சிக் கொல்லி மருந்து கலக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் நடத்திய கிடுக்குப் பிடி விசாரணையில் கல்லூரி மாணவர் பகவதி வசமாக சிக்கிக் கொண்டார்.
பகவதியின் நடவடிக்கைகள் சரியில்லாத காரணத்தால், அவரை தாயாரும், தாத்தாவும் கண்டித்து வந்துள்ளனர்.
இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாததால், இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டவர் இதற்காக சிக்கன் ரைஸை தேர்ந்தெடுத்துள்ளார்.
மொத்தமாக 7 சிக்கன் ரைஸை கடையில் வாங்கியவர், இரண்டு பார்சல்களில் மட்டும் பூச்சிமருந்து கலந்து நதியாவுக்கும் சண்முகநாதனுக்கும் கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து விஷம் வைத்து தாத்தாவை கொலை செய்ததாக பேரன் பகவதியை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: மணிப்பூர் கலவரத்தின் முதலாம் ஆண்டு இன்று ! – ப.சிதம்பரம் பகீர் ட்வீட்