நான் எம்.எல்.ஏ ஆளு. அண்ணன் பணம் வாங்கச் சொன்னார் என்று மிரட்டி பலரிடமும் கைவரிசை காட்டிய தில்லாலங்கடி சீனியர் சிட்டிசனை சைபர் க்ரைம் போலீசார் கொத்தாகத் தூக்கி இருக்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் நமது நட்பு வட்டாரத்தில் இருப்பவர் பணம் கேட்பது போன்று ஏமாற்றுவது,
நமக்கு தெரிந்தவர் குரலில் போனில் பேசி பணம் மோசடியில் ஈடுபடுவது,
உங்கள் மகன் அல்லது மகள் தங்கள் கஷ்டடியில் இருக்கிறார்கள். அவர்கள் மீது வழக்கு பதியாமல் இருக்க பணம் கொடுங்கள் என்று மிரட்டுவது என
பல்வேறு வகையிலும் பணம் பறிப்பு சம்பவங்கள் தினம் தோறும் நடந்து வருகின்றன.
அந்தவகையில் பிரபலமான எம்.எல்.ஏக்கள் பெயரில் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தவரைத்தான் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் அம்மன் அர்ஜுனன்.
அதிமுக எம்.எல்.ஏவான இவரது பெயரைச் சொல்லி தொழில் அதிபர் ஒருவரிடம் மர்மநபர் செல்போனில் பேசியிருக்கிறார்.
எம்.எல்.ஏ பணம் கேட்டதாகச் சொல்லி அந்த நபர் மிரட்டியும் இருக்கிறார்.
இதுதொடர்பாக தொழில் அதிபர், எம்.எல்.ஏவுக்கு போன் செய்து கேட்டபோது அவர் மறுத்துள்ளார்.
தொடர்ந்து தனது பெயரைச் சொல்லி மர்மநபர் மிரட்டி பணம் பறிப்பதாகவும், கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
அப்போது தொழில் அதிபரை மிரட்டும்போது மோசடி நபர் பயன்படுத்திய 9443872571 என்னும் செல்போன் எண்ணையும் போலீசில் கொடுத்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அந்த செல்போன் நம்பரை வைத்து தேடிய போலீசார், அந்த எண் மாஸ் மீடியா என்ற பெயரில் செயல்படும் பணப் பரிவர்த்தனை செய்யும் மையத்தின் எண் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மேலும் விசாரணை நடத்தியபோது, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டாறு பகுதியைச் சேர்ந்த 63வயது ரவி, மொபைல் எண்ணை மோசடிக்கு பயன்படுத்தியது தெரியவந்தது.
இதன்பின்னர் திருச்சியில் தலைமறைவாக இருந்த சீனியர் சிட்டிசன் ரவியை ஈரோடு சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 2 செல்போன்கள், 3 சிம்கார்டுகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் செல்போன் எண் அடங்கிய நோட் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ரவி, ஈரோடு, திருப்பூர், கோவை பகுதிகளில் தொழிலதிபர்களுக்கு போன் செய்து எம்.எல்.ஏ பேசுவதாகக் கூறி ஆள்மாறாட்டம் செய்து பணம் பறித்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: ‘உயர் நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலா தேவி மனு!