தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பது, தேர்தலின் போது வழங்கப்படும் 300, 500 ரூபாய் அல்ல. மக்களின் மனசாட்சிதான் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இனாம்மணியாச்சி பகுதியில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
அதனை முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி எம்.எல்.ஏவுமான கடம்பூர் ராஜு திறந்துவைத்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் அம்மாவின் வழியில் 35 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் நின்று எடப்பாடி யார் தலைமையில் சாதனை படைத்தது அதிமுக தான்.
ஆளும் பொறுப்பில் இருந்தாலும் மக்களை சந்திக்க பயந்து கொண்டு 21 தொகுதிகளில் மட்டும் திமுக போட்டியிட்டு மீதமுள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு தாரை வார்த்தது.
அம்மாவின் வழியில் 35 தொகுதிகளில் இரட்டை இலை சின்னம் போட்டியிட துணிச்சலாக எடப்பாடி யார் முடிவு செய்து தேர்தலை சந்தித்துள்ளார்.
திமுக ஆட்சியின் அவல நிலை, நிர்வாகச் சீர்கேடு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, குடிநீர் பஞ்சம், என அனைத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவு இருக்கும்.
மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை தெரிவித்து மக்களை நம்ப வைத்து கழுத்தை அறுத்து ஆட்சிக்கு வந்தது தான் இந்த திமுக அரசு.
தேர்தலின் போது தெரிவித்த 520 வாக்குறுதிகளில் 20 வாக்குறுதிகளை கூட இந்த திமுக அரசு நிறைவேற்ற வில்லை. மக்கள் ஏமாற்றபட்டுள்ளனர் .
அதன் காரணமாக பயந்து அனைத்து கட்சிகளுடன் சமரம் செய்து அவர்களுடன் கூட்டணி அமைத்து தான் இந்த தேர்தலை திமுக சந்தித்துள்ளது.
தேர்தலின் போது மக்கள் எதிர்ப்பை கண்டு அஞ்சி, அவர்களை விலைக்கு வாங்கி விடலாம் எனச் சொல்லி திமுகவினர் செய்த செயல் அனைத்தும் நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.
300 ரூபாய் 500 ரூபாய் தேர்தலை நிர்ணயிக்காது. தேர்தலை நிர்ணயிப்பது மக்களின் மனசாட்சி தான்!
இவ்வாறு அவர் பேசினார்.